Fact Check On Rahul Gandhi Speech: சொத்து மறுஒதுக்கீடு என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமே என, ராகுல் காந்தி பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சொத்து மறுஒதுக்கீடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமா?
நடந்து வரும் மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக 42 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “சொத்துகள் யாரிடம் உள்ளது என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் "நிதி மற்றும் சாதி வாரி" கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி நடத்தும். அதைத் தொடர்ந்து அது சிறுபான்மையினருக்கு சொத்துகள் மறுபகிர்வு செய்யப்படும்” என ராகுல் காந்தி பேசுவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. "மக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து முஸ்லிம்களுக்கு மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் விரும்புகிறது" என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
ராகுல் காந்தியின் பேச்சு உண்மையா?
சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக, ”Rahul Gandhi redistribution promise minorities” என்ற வார்த்தைகளை கொண்டு இணையத்தில் தேடினோம். அதற்கு கிடைத்த தரவுகளின்படி, “முதலில், பிற்படுத்தப்பட்ட சாதிகள், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் மற்றும் பிற சாதியினரின் சரியான மக்கள் தொகை மற்றும் நிலையை அறிய, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம். அதன் பிறகு, நிதி மற்றும் நிறுவன கணக்கெடுப்பு தொடங்கும். அதன்பிறகு, இந்தியாவின் செல்வம், வேலைவாய்ப்புகள் மற்றும் பிற நலத் திட்டங்களை மக்கள்தொகை அடிப்படையில், பகிர்ந்தளிப்பதற்கான வரலாற்று பணியை நாங்கள் மேற்கொள்வோம், ”என்று அதராபாத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இதன் மூலம், ராகுல் காந்தியின் வீடியோ தவறாக எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுவதாக சந்தேகம் எழுந்தது. அதனடிப்படையில் கடந்த 6ம் தேதி ராகுல் காந்தியின் யுடியூப் சேனலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கூடுதல் ஆதாரங்கள்..
வீடியோவை அதனை ஆய்வு செய்ததில், “காங்கிரஸ் ஆய்வின் மூலம் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பொது வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்கள் மற்றும் சிறுபான்மையினர் இந்தியாவில் தங்கள் பங்கேற்பு எவ்வளவு என்பதை அறிந்து கொள்வார்கள். இதற்குப் பிறகு, நாங்கள் ஒரு நிதி மற்றும் நிறுவன ஆய்வு நடத்தி, இந்தியா உண்மையில் யாருடைய கைகளில் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்போம். இந்த வரலாற்று நடவடிக்கைக்குப் பிறகு, நாங்கள் ஒரு புரட்சிகர நடவடிக்கை எடுப்போம்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளர். இதனால், உள்நோக்கத்துடன் சிலர் ராகுல் காந்தியின் பேச்சை தவறாக இணையத்தில் பரப்புவது உறுதியாகியுள்ளது.
குற்றச்சாட்டு: நாடு முழுவதும் 'நிதி மற்றும் நிறுவன' கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சிறுபான்மையினருக்கு சொத்துகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ராகுல் காந்தி பேசியதாக பரவும் வீடியோ.
உண்மை: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது. உரிய கணக்கெடுப்புகளுக்குப் பிறகு ஓபிசி, எஸ்சி, எஸ்டி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது சாதிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு சொத்துகள் மறுஒதுக்கீடு செய்யப்படும் என ராகுல் காந்தி பேசியதே உண்மை.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக INDIA TODAY நாளிதழில் வெளியிடப்பட்டது . தலைப்பு, முன்னுரை மற்றும் அறிமுக பத்தி தவிர, இந்த தொகுப்பின் மற்ற விவரங்கள் எதுவும் ABP Nadu ஊழியர்களால் திருத்தப்படவில்லை.