Fact Check; ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக அமைச்சர் பேசியதாக பரவும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
குற்றச்சாட்டுகள் என்ன?
பாரதிய ஜனதா கட்சியின் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அமைச்சருமான கிரோடி லால் மீனா பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒன்பது வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ” 400 எம்.பிக்களுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரும். அரசியலமைப்பை மாற்றியமைப்போம்” என கிரோடி லால் மீனா பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை இணையத்தில் ஏராளமானோர் பார்த்ததோடு, ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில் #ModiHataoDeshBachao என்ற ஹேஷ்டேக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விசாரனையில் அது தவறாக உள்நோக்கத்துடன் எடிட் செய்யப்பட்டு பகிரப்படுவது உறுதியாகியுள்ளது.
உண்மை என்ன?
வீடியோவை ஆராய்ந்தபோது First India News என்ற பெயர் கொண்ட செய்தி தளத்திற்கு, கிரோடி லால் மீனா பேட்டி அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து மேற்கொண்ட தேடுதல் மூலம் 56 விநாடிகள் ஓடும் அந்த முழு வீடியோ கிடைக்கப் பெற்றது. அதில், “ மோடி ஜி தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து, அரசியலமைப்பை மாற்றுவார் என்று காங்கிரஸ் கட்சி ஒரு வதந்தியை பரப்புகிறது. அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த வதந்தி நாடு முழுவதும் பரவி வருகிறது. பீம்ராவ் ராம் அம்பேத்கர் மீண்டும் உயிர் பெற்றாலும் அரசியலமைப்பை மாற்ற முடியாது என்று பார்மரில் மோடி கூறியுள்ளார் ” என கிரோடி லால் மீனா தெரிவித்துள்ளார். அதாவது காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளாரே தவிர, அரசியலமைப்பை மாற்றுவதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை.
இதுதொடர்பான வீடியோவை அந்நிறுவனம் தனது யுடியூப் தளத்தில் கடந்த 22ம் தேதி பதிவேற்றியுள்ளது. அதனை தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்து, “இடஒதுக்கீட்டை யாராலும் நிறுத்த முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார். சில குற்றவாளிகள் எனது கருத்துகளைத் திரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இதை நிறுத்துங்கள், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என கிரோடி லால் மீனா எச்சரித்துள்ளார்.
தீர்ப்பு:
ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கிரோடி லால் மீனா காங்கிரஸின் குற்றச்சாட்டை எதிர்த்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதையோ, இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவதையோ பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறவில்லை. தவறான உள்நோக்கத்திற்காக வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. எனவே, கிரோடி லால் மீனா பேசுவதாக பரவும் வீடியோ போலியானது என்பதே உண்மை.
also read: Cropped video shared to claim BJP leader confirmed party will change the Constitution
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக logicallyfacts.com என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, தமிழ் வாசகர்களுக்கு ஏற்ப ABP Nadu-வால் இந்த செய்தி தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.