Fact Check: தமிழ்நாட்டில் ஒரே எண்ணில் மூன்று அரசுப் பேருந்துகளா? என்னயா நடக்குது?
ஒரே எண்ணில் மூன்று அரசுப் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதாகவும் TN74 N 1813 எண்ணுடன் இருக்கும் பேருந்துகளின் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது.

Claim: தமிழ்நாட்டில் ஒரே எண்ணில் மூன்று அரசுப் பேருந்துகள் ஓடுவதாக TN74 N 1813 எண்ணுடன் இருக்கும் பேருந்துகளின் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது.
Fact: தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஆண்டுகளில் படம்பிடிக்கப்பட்ட ஒரே பேருந்து என்பது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மக்கள் சேவைக்காக பல பேருந்துகளை நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இயக்குகிறது. போக்குவரத்துத் துறையில் வருவாய் இழப்புகள் இருந்தாலும், பெண்கள் இலவசமாகப் பேருந்து பயணம் மேற்கொள்ள ‘பிங் பஸ்’ போன்ற சேவைகளை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. விழா காலங்களிலும், கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்பட்டு மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல வழிவகுப்படுகிறது. இப்படி இயங்கிவரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள், தேவைக்கேற்றவாறு ஒவ்வொரு கோட்டங்களுக்கும் மாற்றி விடப்படும்.
புரியும்படியாக சொல்ல வேண்டும் என்றால், நகரங்களில் விடப்பட்ட பேருந்து சில ஆண்டுகள் கழித்து கிராமப் பகுதிகளுக்கு விடப்படும். இப்படி இருக்கும் சூழலில், ஒரே எண்ணில் மூன்று பேருந்துகள் ஓடுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்படுகிறது. அந்த செய்தியில், ‘TN74 N 1813’ என்ற எண் கொண்ட 3 பேருந்துகள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாச்சியார் நாச்சியார் (fb / @vasanthy.vasanthy.775) என்ற பக்கத்தில், “TN74 N 1813 இந்த மூன்று பேருந்துக்கும் ஒரே நம்பர் தான், போட்டுருக்குற சட்டை மட்டும் தான் வேற வேற.” என்று குறிப்பிடப்பட்ட பதிவு ஒன்று பேருந்துகளின் படங்களுடன் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த வீடியோவில் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, ஒரே பதிவு எண்ணில் 3 அரசு பேருந்து இயக்கப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் சிறப்பு பேருந்து இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒரே பேருந்து, திருநெல்வேலியில் புறநகர் பேருந்தாகவும், பின்னாளில் நகரப் பேருந்தாகவும் மாற்றி அமைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என விளக்கம் அளித்தார்.
அமைச்சர் பேட்டி கொடுத்த வீடியோவின் அடிப்படையில், இந்த வைரம் புகைப்படம் பல மாதங்களாக இணையத்தில் உலாவருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அடிப்படையில் முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்படும் பேருந்து, பின் நாட்களில் சிறிய நகரங்களில் இயக்கப்படும் என்று விளக்கியுள்ளார். எனினும், இது தொடர்பாக தற்போது அரசு ஏதேனும் விளக்கம் அளித்துள்ளதா என அறிய, ‘TN74 N 1813’ எனும் பேருந்து எண் கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு (TN Fact Check) இதற்கு மறுப்புத் தெரிவித்து பதிவிட்டுள்ளதை காண முடிந்தது. அதில், TN74 N 1813 என்ற ஒரே எண்ணில் 3 பேருந்துகள் இயக்கப்படுவதாகப் பரவும் வதந்தி! என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. உள்ளீடு செய்யப்பட்டிருக்கும் பதிவில், “TN 74 N 1813 என்ற இப்பேருந்து 08.02.2017 அன்று புதிய பேருந்தாகக் கூண்டு கட்டி 09.03.2017 அன்று முதல் புறநகர் பேருந்தாக நாகர்கோவில் இயக்கப்பட்டது. திருவனந்தபுரம் தடத்தில் 3 ஆண்டுகள் கழித்து இப்பேருந்துக்குப் பதில் புதிய பேருந்து இயக்கப்பட்டதால், 04.01.2020 அன்று முதல் இது நகரப் பேருந்தாக (Seat Alteration) செய்யப்பட்டு இயக்கப்பட்டது. இப்பேருந்தின் வயது 6-ஐ கடந்த நிலையில் அரசாணைப்படி கடந்த 07.10.2023 அன்று இதன் கூண்டு புதுப்பிக்கப்பட்டு நகரப் பேருந்தாக நாகர்கோவில் - மேல் மிடாலம் தடத்தில் (தடம் எண் : 9A) இயக்கப்பட்டு வருகிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று, அக்டோபர் 17, 2024 அன்றும் அரசின் உண்மை கண்டறியும் குழு இதுதொடர்பான திரிக்கப்பட்ட செய்திக்கும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிவு: மேற்கொண்ட தணிக்கையில், இதே செய்தி பல ஆண்டுகளாக உலா வருவதும், அதனை மறுத்து அவ்வப்போது அரசு விளக்கம் அளித்திருப்பதும் உறுதியானது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Telugu Post என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.