Fact Check: பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.. போர்க்கொடி தூக்கும் அதிமுக மூத்த தலைவர்கள்.. என்னாச்சு?

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித்ஷாவின் டெல்லி சந்திப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா ஆகியோர் கருத்து தெரிவித்ததாக தந்தி டிவி மற்றும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

Continues below advertisement

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (மார்ச் 25) டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். தொடர்ந்து, தமிழ்நாடு புறப்படுவதற்கு முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

Continues below advertisement

அப்போது, அமித்ஷாவுடன் அரசியல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி," தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டிற்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்” என்று கூறினார்.

பழனிசாமியின் இந்த பதில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் முன்னாள் எம்பி அன்வர் ராஜா ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்ததாக நேற்றைய (மார்ச் 25) தேதியிட்ட தந்தி டிவி (Archive) மற்றும் புதிய தலைமுறை (Archive) ஆகிய ஊடகங்களில் நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் தந்தி டிவி ஊடகத்தின் நியூஸ் கார்டில், “அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம், எனவே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; இல்லையேல் அதிமுகவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டில், “எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா இருவரும் சிறுபான்மை மக்களின் அரணாக நின்று மதவாதிகளிடம் இருந்து பாதுகாத்தனர்; அப்பேர்ப்பட்ட அதிமுக என்ற பேரியக்கம் இன்று அதன் கொள்கையில் இருந்து விலகி செல்வது மனதை ரணமாக்குகிறது. புரட்சி தலைவி அம்மா அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுபவர்களோடு இனியும் இணைந்து என்னால் பயணிக்க முடியும் என்று தோன்றவில்லை; காலமறிந்து முடிவெடுப்பேன்!” என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Fact-check:

நாம் மேற்கொண்ட ஆய்வில் வைரலாகும் இரண்டு நியூஸ்கார்டுகளும் போலி என்று தெரியவந்தது.

வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இரண்டு நியூஸ் காட்டிலும் உள்ள தகவல்களை தனித்தனியே ஆய்வு செய்தோம்.

தந்தி டிவி நியூஸ் கார்ட்:

வைரலாகம் நியூஸ் கார்டில் இருப்பது போன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து தெரிவித்தாரா என்பதை அறிந்துகொள்ள, அது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த ஒரு கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, நேற்றைய தேதியில் இவ்வாறான நியூஸ் கார்டை தந்தி டிவி ஊடகம் வெளியிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடிய போது. அவ்வாறான எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், தந்தி டிவி ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டதற்கு “வைரலாகும் நியூஸ் கார்ட் போலி தான்” என்று உறுதியாக தெரிவித்தனர்.

புதிய தலைமுறை நியூஸ் கார்ட்:

அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா புதிய தலைமுறை வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில் இருப்பது போன்ற கருத்தை தெரிவித்தாரா என்று முதலில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், அன்வர் ராஜாவின் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். அப்போது, 2017ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் அதில் எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது. மேலும், வைரலாகும் நியூஸ் கார்டை புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை என்று மறுப்பையும் தெரிவித்துள்ளது.

மறுப்பு தெரிவித்த செய்தி நிறுவனம்:

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து ஓ. பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எல்லாம் நன்மைக்கே. அதிமுக கட்சியில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைவதுதான் என்னுடைய விருப்பம். அமிஷாவை அவர் சந்தித்தது குறித்து அவரிடம் கேளுங்கள்" என்று பதிலளித்தார். தற்போது வரை இவரை தவிர அதிமுக தொடர்புடைய வேறு யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

Conclusion:

நம் தேடலின் முடிவாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் என்று வைரலாகும் தந்தி டிவி மற்றும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டுகள் இரண்டும் போலியானவை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக News Meter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola