அமெரிக்க அதிபர் தேர்தலில் யானை சின்னம் கொண்ட குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டிருந்த நிலையில்,கழுதை சின்னம் கொண்ட ஜனநாயககட்சி சார்பில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டிருந்தார். அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில்,டொனால்டு டிரம்ப் பெரும்பான்மையான இடங்களை பெற்று வெற்றி பெற்றார்.
பிரதமர் மோடி கோஷம்?
இதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப்பின் உரையின் போது கலந்து கொண்டவர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் கோஷமிட்டதாகக் கூறி, வீடியோவானது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பாஜக எம்எல்ஏ அசோக் சைனி, பாஜக மத்திய பிரதேச மாநில துணைத் தலைவர் ஜிது ஜிராட்டி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் சில சமூக ஊடக பயனர்கள் சிலர் பகிர்ந்தனர்.
உண்மை என்ன?
இதையடுத்து இந்த வீடியோவானது பெரிதும் வைரலானது. உண்மை என்ன? இது உண்மையா என பார்க்கும் போது, இல்லை என தி நியூஸ் மீட்ட உண்மை சரிபார்ப்பு தளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேர்தலில் வேட்பாளராக ராபர்ட் எஃப் கென்னடி போட்டியிட்டார். ஆனால் ஆகஸ்ட் மாதம் தனது பிரச்சாரத்தை கைவிட்டு பின்னர் டிரம்பை ஆதரித்தார். அவரை குறிப்பிட்டுதான், அவரது செல்லப்பெயரான் "பாபி" என்று கூட்டத்தினர் கோஷமிட்டனர்.டிரம்ப் பேசிய முழு உரையில், ராபர்ட் எஃப் கென்னடியின் பெயரை டிரம்ப் குறிப்பிடுகிறார்.
”பாபி கோஷம்:”
சில வினாடிகளுக்குப் பிறகு, கூட்டம் ராபர்ட்டின் குறுகிய புனைப்பெயரான 'பாபி' என்று கோஷமிட தொடங்கியது, அதைத் தொடர்ந்து டிரம்ப் கூறுகிறார், "அவர் ஒரு சிறந்த மனிதர், அவர் சில விஷயங்களைச் செய்ய விரும்புகிறார், நாங்கள் அவரைப் அனுமதிக்கப் போகிறோம், என தெரிவித்தார்.
எனவே, கூட்டத்தில் மோடியின் பெயர் கோஷம் எழவில்லை என்றும் ,அது பாபி என்றே கோஷமிடப்பட்டது என்றும், இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ராபர்ட் கென்னடி, யார் என்று வைரலாகி வரும் நிலையில், ராபர்ட் எஃப் கென்னடி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான்எஃப் கென்னடியின் மருமகனாவார். இவர் சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் , இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.இவர் தற்போது டிரம்பின் ஆதரவாளராக மாறியுள்ளார். இவருக்கு டிரம்ப் ஆட்சியில் , பதவியும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.