தமிழ் ஓடிடி தளங்களில் பல வெற்றிப்படைப்புகளை கொடுத்து வரும் ZEE5 ஓடிடி தளத்தின், அடுத்த படைப்பாக "செங்களம்" என்ற இணையத் தொடர் வெளியாகவுள்ளது. 


அபி & அபி எண்டர்டெயின்மன்ட் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் தயாராகியுள்ள இணையத் தொடர்தான் செங்களம். இதில் ‘மெட்ராஸ்’ பட புகழ் நடிகர் கலையரசன் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளனர். தென் தமிழக பின்னணியில் நடைபெறும் அரசியல் திரில்லராக உருவாகியுள்ளது. “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது.


இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன், இசையமைப்பாளர் தரண், ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன்,  நடிகர்கள் டேனியல், பிரேம், நடிகைகள் விஜி சந்திரசேகர், வாணி போஜன் மற்றும் இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் என பலர் கலந்து கொண்டனர். 




ட்ரைலர் வெளியீடு:


செங்களம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை விஜி சந்திரசேகர்  பேசுகையில், “இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் மிகச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார். படக்குழுவினர் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் நல்லதொரு கதாப்பத்திரம் செய்துள்ளேன்” என்று கூறினார். 


நாயகி வாணி போஜன், “இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனைச் சந்தித்தேன், எனக்குப் பிடித்திருந்தது ஆனால் இடையில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் இந்த வெப் சீரிஸில் நடிக்கவில்லை என்றேன். ஆனால் எல்லோரும் எனக்கு ஆதரவளித்து என்னை இந்த கதாபாத்திரம் செய்ய வைத்துள்ளார்கள். இது, எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன். இப்போது பார்க்கும் போது நான் ஒரு நல்ல படைப்பில் பங்கேற்றிருக்கிறேன் என மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் சாருக்கு நன்றி” என்றார். மேலும், செங்கமளம் தொடரை பார்த்து ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  


செங்கமளம் தொடரின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்  பேசுகையில், “அமீர் சாரை இரண்டு நாளுக்கு முன்பு தான் அழைத்தேன் அவர் வந்திருந்து எங்களை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில் தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன். கௌஷிக் சாரிடம் இந்தக் கதையைச் சொன்ன போது வெப் சீரிஸாக பண்ணலாம் என்றனர். எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். இந்த தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர்.


இது, உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும். கலையரசன் எந்த கதாபாத்திரம் தந்தாலும் அசத்தக்கூடியவர் இதிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். வாணி போஜன் மிக நல்ல நடிப்பைத் தந்துள்ளார். விஜி மேடம், ஷாலி, கண்ணன் என எல்லோருமே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள். என் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவருமே எனக்கு மிகப்பெரும் பலம். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைத்துள்ளனர். விரைவில் உங்களுக்குத் திரையிடவுள்ளோம். பார்த்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி. 




இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் அமீர் பேசுகையில், “இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த டிரெய்லர் பார்த்த போது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே,  அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ்.ஆர்.பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த டிரெய்லரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான் மிகச்சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.