நேத்ரன் மகள் அபிநயா:


கடந்த 25 ஆண்டுகளாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கால் பதித்து ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தவர் நடிகர் நேத்ரன்.  தன்னுடன் நடித்த சீரியல் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்று 2 மகள்கள் உள்ளனர். இதில், அபிநயா பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். இவ்வளவு ஏன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீசன் 2 சீரிஸிலும் நடித்திருக்கிறார்.


நேத்ரன் புற்றுநோயால் மரணம்:


இந்த நிலையில் தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நேத்ரன் டிசம்பர் 3 ஆம் தேதி உயிரிழந்தார். இது அவர்களது ஒட்டு மொத்த குடும்பத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புற்றுநோய் பாதிப்பால் 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நேத்ரனுக்கு சிகிச்சை அறுவை சிகிச்சை முடிந்து அவர் ஐசியூவில் இருப்பதாக மகள் அபிநயா இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். 




நேத்ரன் நடித்த சீரியல்கள்:


நேத்ரன் பொன்னி, ரஞ்சிதமே, பாக்கியலட்சும் ஆகிய சீரியல்களில் நடித்து வந்த நிலையில் உடல்நிலை காரணமாக அதிலிருந்து விலகினார். எனினும், தான் உடல் நலம் பெற்று நடிப்பதற்கு திரும்ப வருவேன் என்று சக நடிகர், நடிகைகளிடம் கூறி இருந்தார். இவர் மீதான அன்பின் காரணமாக பாக்கிய லட்சுமி மற்றும் பொன்னி சீரியல்களில் இவரின் கதாபாத்திரத்தில் இதுவரை யாரையும் நடிக்க வைக்க தேர்வு செய்யவில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நேத்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


நிறைவேறாமல் போன கனவு:


சினிமாவில் சாதிக்க வேண்டும், ஆஸ்கர்  விருதை வெல்ல வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்த நேத்ரன் தன்னுடைய மகள்களுக்கு அதைப் பற்றி சொல்லியிருக்கிறார். கடந்த 6 மாதங்களாக அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடியை மகள்கள் இருவருமே நேரில் கண் கூடாகவே பார்த்திருக்கிறார்கள். அப்பாவின் வலியும், வேதனையும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் அல்லவா.  அதனால் இனி அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வர தொடங்கியிருக்கிறார்கள். 


அபிநயாவின் சமையல் வீடியோ:


மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கைக்கு திரும்பி வரும் நேத்ரனின் மகள் அபிநயா தான் சமையல் செய்து ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதற்கு ரசிகர் ஒருவர் அப்பா இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பணத்திற்காக இப்படி புரோமோஷன் வேலையில் இறங்கிவிட்டீர்கள். நீங்கள் ரொட்டி செய்வதை எல்லாம் எங்களால் பார்க்க முடியாது என்று கமெண்ட் போட்டிருந்தார்.


விமர்சனத்திற்கு பதிலடி:


இதற்கு பதிலளித்த அபிநயா, நாங்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்கள் எப்படி இருக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். எவ்வளவு சோகம் மனதில் இருந்தாலும், உயிர் வாழ்வதற்கு சாப்பிட்டு தானே ஆக வேண்டும்.  நாங்கள் சாப்பாட்டிற்கு தான் ஃபுட் ரெடி பண்ணிக் கொண்டு இருந்தோம். அப்படியிருக்கும் போது எங்களுடைய விஷயத்தில் நீங்கள் கருத்து சொல்வது என்பது ரொம்பவே தவறு என்று பதிவிட்டிருந்தார். அபிநயாவின் இந்த எதார்த்தமான அணுகுமுறையை பாராட்டி வரும் ரசிகர்கள் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.