வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பான் இந்தியன் படமாக உலகெங்கிலும் இன்று வெளியான திரைப்படம் 'தி கோட்'. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், வைபவ், மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு என மிக பெரிய திரை பட்டாளமே நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை என சில விமர்சனங்கள் எழுந்தன. ஒரு சில பாடல்கள் ட்ரெண்டிங்காகும் ஆனால் ஒரு சில பாடல்கள் எவர்க்ரீன் பாடல்களாக என்றுமே நிலைத்து இருக்கும். அந்த பாடல்களை படத்துடன் சேர்ந்து பார்க்கும் போது வேறு விதமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி பட்ட பாடல்களை தான் யுவன் 'தி கோட்' படத்திற்காக கொடுத்துள்ளார் என வெங்கட் பிரபு சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'தி கோட்' படம் இன்று வெளியானதை அடுத்து யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
"உங்கள் அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி. தளபதி விஜய் அண்ணா மீது எனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்த எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அர்ச்சனா, ஐஸ்வர்யா, அகோரம் சார் என அனைவருக்கும் எனது நன்றிகள். நிச்சயம் என்னுடைய ஃபேவரட் வெங்கட் பிரபு அண்ணன் இல்லாமல் இது எதுவுமே நடந்து இருக்காது" என போஸ்ட் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.