மாநிலம் முழுவதும் 2024- 25ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடந்து முடிந்துள்ளது. இதில் மொத்தமுள்ள 1,62,392 இடங்களில் 1,07,805 இடங்கள் நிரம்பின. மொத்தத்தில் 66.39 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
பொறியியல் கலந்தாய்வின் முடிவில் நிரம்பிய இடங்கள், கல்லூரிகள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, எந்த படிப்புகளுக்கு அதிக மற்றும் குறைந்த வரவேற்பு என்பது குறித்து பிரபல கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்து உள்ளதாவது:
3ஆவது கட்டக் கலந்தாய்வில் 46,723 மாணவர்கள் இட ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுள்ளனர். முந்தைய கட்டக் கலந்தாய்வில் கலந்துகொண்ட 1,186 மாணவர்களுக்கு 3ஆவது கட்டக் கலந்தாய்வில் இடம் கிடைத்துள்ளது. 54,587 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. இதே நேரத்தில் 50,514 இடங்கள் கடந்த ஆண்டு காலியாக இருந்தன.
கடந்த ஆண்டு இருந்த 1,44,652 இடங்களில் 65 சதவீத இடங்கள் அதாவது 94,138 இடங்கள் நிரம்பி இருந்தன. இம்முறை மொத்தத்தில் 66.39 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
எந்த எந்தக் கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள்?
3 கட்டக் கலந்தாய்வின் முடிவில் 29 கல்லூரிகள் 100 சதவீத இடங்களையும் நிரப்பி விட்டன. இதில் 10 கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகும். கடந்த ஆண்டு 16 கல்லூரிகள் அனைத்து இடங்களையும் நிரப்பி இருந்தன. இம்முறை 81 கல்லூரிகள் 95 சதவீத இடங்களை நிரப்பி உள்ளன.
109 கல்லூரிகள் 90 சதவீத இடங்களை நிரம்பியுள்ளன. அதேபோல 80 சதவீத இடங்களை 149 கல்லூரிகள் நிரப்பி உள்ளன. 257 கல்லூரிகள் 50 சதவீத இடங்களை நிரப்பிய நிலையில், 52 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களையே நிரப்பியுள்ளன.
ஓரிடம் கூட நிரம்பாத அவலம்
33 கல்லூரிகளில் ஓரிலக்கத்தில்தான், பொறியியல் இடங்கள் நிரம்பி உள்ளன. இந்த ஆண்டு 7 பொறியியல் கல்லூரிகளில் ஓரிடம் கூட நிரம்பவில்லை.
என்ன படிப்புகளுக்கு வரவேற்பு?
கலந்தாய்வு முடிவின் அடிப்படையில் கணினி அறிவியல், செயற்கை நுண்ணற்வு தரவு அறிவியல் (AIDS), இசிஇ மற்றும் ஐ.டி. துறைகள் அதிகம் தேர்வு செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக 45 சதவீத இடங்கள், கணினி அறிவியல் மற்றும் ஐ.டி. சார்ந்த துறைகளாலேயே நிரப்பப்பட்டுள்ளன. மெக்கானிக்கல், சிவில் துறைகள் குறைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகளாக உள்ளன.
என்ன செய்ய வேண்டும்?
அண்ணா பல்கலைக்கழகம் குறைவான இடங்களை மட்டுமே கலந்தாய்வில் நிரப்பும் பொறியியல் கல்லூரிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இன்னுமே நம் மாணவர்களுக்கு சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறையில் சிக்கல் இருக்கிறது என்பது முந்தைய கட்டக் கலந்தாய்வில் இருந்து இந்தக் கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்பட்டதன் மூலம் தெரிய வருகிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.