பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன்


 கோவையை சேர்ந்த  TTF வாசன் என்ற இளைஞர் Twin throttlers என்ற யூடியூப் சேனலை  நடத்தி வருகிறார். இந்த சேனலில் விலை உயர்ந்த பைக்கை கொண்டு இவர் செய்யும் சாகசங்கள் வீடியோக்களாக வெளியிடப்படும். கிட்டதட்ட 38 லட்சம் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார். இவரது பைக் சாகசங்கள்  2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம். அவர் செல்லும் இடமெல்லாம் ஏதோ சினிமா பிரபலங்களை காண குவிவதை போன்று கூட்டம் கூடுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 


அதேசமயம் TTF வாசன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இவர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது பிற இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை கண்டித்து வருகின்றனர். கடந்தாண்டு டிசம்பரில் பிரபல யூட்யூபருமான  ஜி.பி.முத்துவை வைத்துக்கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டியதில் காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 


அனுமதியின்றி கூட்டம் சேர்த்தது, அதிவேகமாக பைக் ஓட்டியது, வாகன விதிகளை மீறியது என தொடர்ச்சியாக ஏகப்பட்ட சர்ச்சைகளில் TTF வாசன் சிக்கி வருகிறார். கடந்த வாரம் கூட ஊட்டி மலைப்பாதையில் அதிவேகமாக பைக் ஓட்டியதால் அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் அவரை நிறுத்த முயன்றாகவும், வாசன் நிறுத்தாமல் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மூலம் அதிவேகமாக சென்ற பைக் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், எச்சரித்து டிடிஎஃப் வாசன் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 


இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், ஊடகங்கள் இந்த விவகாரத்தில் தவறான தகவலை பரப்பியதாகவும், 2 சைலன்ஸர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி போலீசார் கேள்வி எழுப்பியதாகவும் விளக்கமளித்தார். உள்ளூர் சேனல் முதல் முன்னணி சேனல் வரை இந்த விவகாரத்தில் தவறான தகவலை வெளியிட்டதாகவும் தெரிவித்தார். அடுத்ததாக நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன்.  எல்லாத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் தவறான தகவல் வெளியிடுபவர்கள் மீது அவதூறு வழக்கு தொடராமல் இருப்பது எனக்கு நிறைய வேலை இருப்பதால் தான். 


சினிமாவில் TTF வாசன் 


இந்நிலையில் TTF வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 29 ஆம் தேதி TTF வாசன் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சொல்லப்படுவதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.