யாருக்கெல்லாம் சாப்பாடு குறிப்பாக பிரியாணி பிடிக்குமோ அவர்களுக்கு எல்லாம் மிகவும் பரிச்சயமான ஒரு முகம் யூடியூபர் இர்ஃபான். அந்த அளவிற்கு ஏராளமான ரெசிபிக்கள், ஹோட்டல்கள் என இவர் கால் வைக்காத இடங்களே கிடையாது எனலாம். அந்த அளவிற்கு மனுஷன் அத்தனை பிரபலம்.


 



சாப்பாடு எப்படி கன்டென்ட்டானது :


சும்மா பொழுதுபோக்காக யூடியூபை தொடங்கியவர். தொடக்கத்தில் எந்த ஐடியாவும் தோன்றாததால் சினிமா விமர்சனம், வ்லோக் என பலவற்றை ட்ரை செய்து பார்த்து எதுவும் ஒர்க் அவுட் ஆகாததால் வேறு என்ன கன்டென்ட் என யோசிக்கும் போது தான் பல்பு எறிந்துள்ளது. 
நமக்கு சோறு தான் முக்கியம் என்ற வகையை சேர்ந்த இர்ஃபான் தனக்கு பிடித்தமான சாப்பாட்டையே கன்டென்ட்டாக எடுத்துக்கொண்டால் என்ன என்ற ஐடியாவை பிக்கப் செய்து கொஞ்சம் கொஞ்சமாக கல்லா கட்ட துவங்கினார். இந்த யூடியூப் தொடங்குவதற்கு முன்னர் ஒரு ஹோட்டலில்  மேனேஜராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையை தைரியமாக விட்டு அவர் ரிஸ்க் எடுத்து அவர் ஃபுட் ரிவியூவராக உருவாகியதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. இந்த இடத்திற்கு அவர் அவ்வளவு எளிதில் வந்து விடவில்லை. பல சர்ச்சைகள், விமர்சங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளார். 



கூட்டணி சேர்ந்த இர்ஃபான் - ஜிப்ரான் :
 
இப்படி படிப்படியாக முன்னேறி ஒரு யூடியூப் செலிபிரிட்டியாக இருக்கும் இர்ஃபான் ஒரு வித்தியாசமான முயற்சியாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். பிரபலமான இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையில் பிரியாணி பிரியர்களுக்கான ஒரு பாடலை பாடியுள்ளார் யூடியூபர் இர்ஃபான் என்ற அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார் இர்ஃபான்.    



துணிவான ஜிப்ரான் :


இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம். துணிவு திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. வாகை சூட வா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். வத்திக்குச்சி, திருமணம் எனும் நிக்காஹ், உத்தமவில்லன், பாபநாசம், ராட்சசன், கடாரம் கொண்டான் என பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 


ரெடியாகிறது பிரியாணி சாங் :


தற்போது ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் யூடியூபர் இர்ஃபானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு " உங்களை பாட வைத்ததில் மிக்க  மகிழ்ச்சி. விரைவில் பிரியாணி பிரியர்களுக்காக நாம் இருவரும் இணைந்து பிரியாணி பாடல் ஒன்றை டெடிகேட் செய்வோம்" என பதிவிட்டு இருந்தார். எனவே விரைவில் பிரியாணி பிரியர்களுக்கான ஒரு பிரியாணி பாடலை ஜிப்ரான் இசையில் இர்ஃபான் குரலில் கேட்க தயாராகுங்கள்.