மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும் மாவீரன் திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என இணையதளத்தில் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு எழுந்துள்ளது.


மாவீரன்


மண்டேலா படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஸ்கின், யோகி பாபு முதலியவர்கள் படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியாக மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் மற்றொரு முக்கியமான படமாக மாறியுள்ளது. இன்றுடன் உலகம் முழுவதிலும் மொத்தம் ரூ. 75 கோடிகளை வசூல் செய்துள்ளது .


மாவீரன் கதை


பிரச்சனையில் இருந்து மக்களை காக்க போராடுபவனே உண்மையான மாவீரன் என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும்.


சென்னையில் காலம் காலமாக வசிக்கும் பூர்வகுடி மக்கள் வளர்ச்சிக்காக நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு "மக்கள் மாளிகை" அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படுகிறார்கள். ஊழலின் ஊற்றாக, அடுத்த நொடி உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் அந்தக் குடியிருப்பில் தினம் தினம் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் போகாமல் எதையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழும் தைரியம் இல்லாத காமிக்ஸ் வரைபட கலைஞரான சிவகார்த்திகேயன், ஒரு பிரச்சனையில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது தனக்கு கிடைத்த சூப்பர் பவரை கொண்டு அந்தத் துறை அமைச்சராக வரும் மிஷ்கினுடன் தைரியமாக மோதுகிறார்.


மக்கள் அவரை மாவீரனாக பார்க்கிறார்கள். சூப்பர் பவரை கொண்டு சிவகார்த்திகேயன் மாவீரனாக அவர் மக்களை காத்தாரா? இல்லை மக்களுக்கான உரிமைப் போரில் தோற்றாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.


திருடப்பட்ட கதையா மாவீரன்


இத்தகைய சூழலில் மாவீரன் கதை தன்னுடையது என்றும் எந்த வித அனுமதியுமில்லாமல் தன்னிடம் இருந்து அந்தக் கதை திருடப்பட்டது  என்று இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் மாவீரன் படத்தின் மொத்த திரைக்கதை , படத்திற்கான பட்ஜட், ஸ்டோரி போர்ட் ஆகிய அனைத்தையும் ஆதாரமாக காட்டியுள்ளார் அந்த நபர். 2016-ஆம் ஆண்டில் இருந்து தான் மாவீரன் படத்தின் கதையை எழுதி வருவதாகவும் முதலில் தான் அந்தக் கதையை நடிகர் ஜெயிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் ஜெய்யை தொடர்புகொள்ள முடியாமல் போனதால் நடிகர் சந்தானத்திடம் படத்தின் கதையை கூறியதாகவும் சந்தானத்திற்கு கதை பிடித்திருந்ததாகவும், தற்போது தான் நடித்து வரும் படங்களின் வேலைகளை முடித்துவிட்டு வருவதாக அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார், அந்த இளைஞன்.


இதற்கிடையில் தனது கதையை மடோன் அஸ்வின் படமாக இயக்கிவிட்டார் என்றும் இந்த உண்மையை தெரியப்படுத்துவதற்காக மட்டுமே தான் இந்த வீடியோவை வெளியிட்டதாக  கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.