நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பாடங்களை அளிக்கும் மணற்கேணி என்ற செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக பயன்படுத்தும் துணைக் கருவிகளில் ஒன்றாக புதிய ஒரு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு. இந்தச் செயலியின் பெயர் 'மணற்கேணி'.
இதன் வெளியீட்டு விழா சென்னைக்கு அருகிலுள்ள சேலையூரில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஜூலை 25) மாலை நடந்தது. நிகழ்வில் பங்கேற்று மணற்கேணி செயலியை UNCCD துணைப் பொதுச் செயலாளர் இப்ராஹிம் தயாவ் வெளியிட்டார். வெளியீட்டு விழாவில் பங்கேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.
அனைவருக்குமான கல்வி
பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலிப் பாடங்கள் கிட்டும் என்கிற நிலையைப் போக்கி அவற்றை அனைவருக்குமானதாக மாற்றுவதே இந்த செயலியின் நோக்கம். இந்த மணற்கேணி செயலியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை 27,000 பாடப்பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகைபிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களை உருவாக்கி அளித்திருக்கிறது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) நிறுவனம். இதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள் 27,000 பாடப்பொருள்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயலி இலவசமாகவே வழங்கப்படுகிறது. கற்போரின் கற்கும் வேகத்திற்கு ஏற்பவாறு இச்செயலியை பயன்படுத்தும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதாலும் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்ளும் விளக்கப் படங்கள் உள்ளதாலும் கற்றல் முற்றிலும் ஜனநாயகப் படுத்தப்பட்டுள்ளது எனலாம். அனைத்துக் காணொலிகளையும் கேள்விகளையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள கடவுச்சொல் எதுவும் தேவையில்லை. எந்தத் தடையும் இன்றி மிக எளிதாக அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis என்னும் சுட்டியில் உங்கள் அலைபேசியில் உள்ள ப்ளே ஸ்டோருக்குச் சென்று மணற்கேணி செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
மணற்கேணி செயலியை ப்ளே ஸ்டோரில் தேடவேண்டுமெனில் TNSED Manarkeni என்று உள்ளீடு செய்து தேடவேண்டும்.
கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்
மணற்கேனி ஓபன் சோர்ஸாக அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படியாக வெளியிடப்படுகிறது. தற்போதைக்கு பன்னிரெண்டாம் வகுப்பின் முதல் பருவத்திற்கான பாடங்களோடு மணற்கேணி வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிற்கும் காணொலிகளும் கேள்விகளும் தயாராக ஆக, இச்செயலியில் அவை பதிவேற்றம் செய்யப்படும். தமிழ் பேசும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கற்போருக்கும் கையடக்கமாக கிடைக்கும்படி மணற்கேணி வெளியிடப்படும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.
கல்வியை ஜனநாயகப்படுத்தும் இச்செயலியின் துணையோடு நம் ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளதாக அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.