இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவை வெளியிடும் பெண் ஒருவர், மறைந்த நடிகை சௌந்தர்யாபோல் இருப்பதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை சௌந்தர்யா கன்னடத்தில் 1992 ஆம் ஆண்டு கந்தர்வா  என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றி அடுத்த ஆண்டே சௌந்தர்யாவை தமிழ் சினிமா பக்கம் அழைத்து வந்தது. 1993 ஆம் ஆண்டு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான “பொன்னுமணி” படத்தில் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து முத்துக்காளை, அன்பு மகன் மருது, சேனாதிபதி, அருணாச்சலம், காதலா காதலா, மன்னவரு சின்னவரு, படையப்பா, தவசி, இவன், சொக்கத்தங்கம் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். 






குறிப்பாக தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பலரையும் வியக்க வைத்தார். தமிழில் நடிகை தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் முதலில் சௌந்தர்யா தான் நடிக்கவிருந்தார்.


ஆனால் அப்போது அவர் பாஜக கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்றார். அப்போது ஏப்ரல் 17 ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் நடிகை சௌந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார். 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சௌந்தர்யா, மரணம் அடையும் போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.  அவரது மரணம் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. 






அவர் மட்டும் இன்றும் இருந்திருந்தால் முன்னணி நடிகைகள் பலரும் சவால் விட்டிருப்பார் என்னும் அளவுக்கு சௌந்தர்யா ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் மிக முக்கியமானது. இதனிடையே அச்சு அசலாக சௌந்தர்யா போல இருக்கும் பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. சித்ரா என்ற பெயர் கொண்ட அந்த பெண் பதிவிடும் வீடியோவை நடிகை சௌந்தர்யா என நினைத்து பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.