கிரிக்கெட் விரும்பியாக , பேட்டும் கையுமான தன் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக விளங்கும் யோகிபாபு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனக்கு கையொப்பமிட்டு பரிசளித்த கிரிக்கெட் மட்டையைப் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க காமெடி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள நடிகர் யோகிபாபு மற்றொரு புறம் கோலிவுட்டின் வளர்ந்து வரும் கதாநாயகனாகவும் கலக்கி வருகிறார்.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி 'லொள்ளு சபா' மூலம் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்த யோகி பாபு, இயக்குநர் அமீரின் ’யோகி’ எனும் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.


அதன் பின் நடிப்புத் திறமை,  தன் தனித்துவ தோற்றம் ஆகியவற்றின் காரணமாக கவனமீர்த்து சூது கவ்வும்,  டிமாண்டி காலனி என அடுத்தடுத்து பார்வையாளர்களை ஈர்த்தார். ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்திருந்த இவரது கதாபாத்திரம் இவரது சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதுடன், மெர்சல், கோலமாவு கோகிலா என தவிர்க்க முடியாத காமெடியனாக உருவெடுத்தார்.


கோலிவுட்டின் பெரிய நடிகர்களுடன் திரையைப் பகிரத் தொடங்கிய யோகி பாபு, தர்மபிரபு, மண்டேலா என கதாநாயகனாக தனித்து களம் கண்டு வெற்றியும் பெற்றார்.


முன்னதாக பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் இவர் நடிப்பில் வெளியான பொம்மை நாயகி படம் 
நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.


மற்றொரு புறம் சினிமா தாண்டி கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வத்துடன் வலம் வரும் யோகி பாபு, பெரும்பான்மை நேரங்களில் கிரிக்கெட் மட்டையுடனேயே வலம் வருகிறார்.


மேலும் தான் அடிக்கடி வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளியும் வருகிறார் யோகி பாபு.


அந்த வகையில் முன்னதாக இந்திய அணியின் மிஸ்டர் கூல் முன்னாள் கேப்டன் தோனி கையொப்பமிட்டு தனக்கு பரிசளித்த கிரிக்கெட் மட்டையை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யோகி பாபுவின் இந்த ஃபோட்டோ அவரது ரசிகர்களை மகிழ்வித்து லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






கோலிவுட்டில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யோகி பாபு முன்னதாக அதனைக் கொண்டாடி மகிழ்ந்திருந்தார்.


தனது 13 ஆண்டுகள் திரைப்பயணம் குறித்து பேசிய யோகி பாபு, தனது பயணத்தில்  முக்கியப் பங்கு வகித்த திரைத்துறையினர், மீடியா, உறுதுணையாய் இருந்த குடும்பத்தினர் என அனைவருக்கும்  நன்றி தெரிவித்து கொண்டார். மேலும்,2009ஆம் ஆண்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் அமீர், சினிமாவில் தன்னை அறிமுகம் செய்து வைத்த சுப்ரமணியம் சிவா ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.