தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துவரும் நடிகர்கள் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிக்கின்றது. இதில் ரசிகர்கள் மத்தியில் இவரு முக்கிய கதாப்பாத்திரத்துல நடிக்கறாரா? அப்படினா படம் கண்டிப்பா நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளவர் நடிகர் யோகிபாபு. 


யோகிபாபு தமிழ் மட்டும் இல்லாமல், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வருகின்றார். யோகி பாபு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படங்களில் ஒரு சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், யோகி பாபுவோட போர்ஷன் நல்லா இருக்கு என கூறும் அளவிற்கு அனைத்து படங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இது இல்லாமல், யோகி பாபு கதாநாயகனாக நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களாகத்தான் உள்ளது. 


குறிப்பாக இவர் நடித்த மண்டேலா திரைப்படம் ஆழமான சமூக கருத்தை தெளிவாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கும். அந்த படத்தில் யோகி பாபுவின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது. இந்த படம் மட்டும் இல்லாமல், இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படங்களாக அமைந்துள்ளது. 


தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டு இருக்கும் யோகி பாபு சமீபத்தில் இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் யோகிபாபுவின் நடிப்பைப் பார்த்த பாலிவுட் உலகம், இவரது சினிமாக்கள் குறித்து கேட்டறிந்துள்ளது. 


இந்நிலையில், பாலிவுட்டில் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்து கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் காமெடி படம், பூல் புலையா. இந்த படத்தின் இராண்டாம் பாகம், கார்த்திக் ஆர்யன் நடிப்பில்  கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி  வெற்றிபெற்றது மட்டும் இல்லாமல் வசூலில் சக்கைப்போடு போட்டது.  இந்நிலையில் அனிஸ் பாஸ்மி இயக்க இருந்த இதன், 3 வது பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. பாலிவுட்டில் மிகவும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமான டி-சீரீஸ் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க யோகிபாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. 


ஏற்கனவே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.