இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகி பாபு 2009ம் ஆண்டு வெளியான 'யோகி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர். யோகி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்த வகையில் தனது 13 ஆண்டு திரைப்பயணத்தில் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய 'யோகி' திரைப்படத்தின் 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நடிகர் யோகி பாபு கேக் வெட்டி கொண்டாடினார்.
கேக் வெட்டி கொண்டாட்டம் :
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 42' என பெயரிடப்பட்டுள்ளது. பீரியாடிக் திரைப்படமான இதன் ஷூட்டிங் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படத்தில் நடிகர் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யோகி பாபு முதலில் அறிமுகமான 'யோகி' திரைப்படத்தோடு தனது 13ம் ஆண்டை நிறைவு செய்யும் இந்த நாளை எளிமையான முறையில் சூர்யா 42 படத்தின் செட்டில் கேக் வெட்டி கொண்டாடினார் யோகி பாபு. அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
உயர்த்திய அனைவருக்கும் நன்றிகள் :
யோகி பாபு தனது 13 ஆண்டுகள் திரைப்பயணத்தை குறித்து பேசுகையில் அவரது பயணத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்த திரைத்துறையினர், மீடியா மற்றும் உறுதுணையாய் இருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். 2009ம் ஆண்டு வெளியான 'யோகி' திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ அமீர், சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த சுப்ரமணியம் சிவா ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். பாபு எனும் இவர் பெயரை 'யோகி' படத்தில் நடித்ததன் மூலம் யோகி பாபு என மாற்றிக்கொண்டார். அப்படத்தில் யாருக்கும் பரிச்சயமாகாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதற்கு பின்னர் அவர் நடித்த 'பையா' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிந்த ஒரு முகமாக மாறினார். சுந்தர்.சி யின் கலகலப்பு திரைப்படம் மூலம் காமெடி நடிகராக பிரபலமானார். அந்த வகையில் தன்னுடைய திரைப்பயணத்தில் ஒரு வழிகாட்டியாக விளங்கிய இயக்குனர் சுந்தர்.சிக்கும் தனது நன்றிகளை இந்த 13 ஆண்டு கொண்டாட்ட விழாவில் தெரிவித்துக் கொண்டார் நடிகர் யோகி பாபு.
விஜய் டிவி நட்சத்திரம் :
மேலும் சினிமாவில் நுழைவதற்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' மூலம் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டியவர். இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ராம் பாலாவிற்கு நன்றிகளை தெரிவித்து கொண்டார். விஜய் தொலைக்காட்சி மூலம் தொடங்கிய யோகி பாபுவின் பயணம் இன்று பல முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் சேதுபதி, சூர்யா, விஷால் மற்றும் பல் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
உருவத்தால் உதாசீனப்படுத்தப்பட்டாலும் தனது விட முயற்சியால் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளார். காமெடி நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் கூர்க்கா, தர்ம பிரபு, பன்னிகுட்டி, மண்டேலா, காக்டெய்ல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.