தங்கலான் - பார்வதி:
2024-ஆம் ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படங்களில் ஒன்று 'தங்கலான்'. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சியான் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். வெள்ளையர்களால் தங்கம் எடுக்க நிர்பந்திக்கப்படும் பழங்குடியின மக்களை பற்றி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தை, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்திற்கு, செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்ய, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி திருவோத்து நடித்திருந்தார். இவரின் நடிப்பு நடிகர் விக்ரமுக்கு நிகராக பாராட்டுகளை பெற்றது. பல சீன்களில் இவரின் எதார்த்தமான நடிப்பு தங்கலான் படத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்தது.
லப்பர் பந்து - ஸ்வாசிகா:
2024 ஆம் ஆண்டு, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் 'லப்பர் பந்து'. இந்த படத்தில் ஹீரோ - ஹீரோயினை விட அதிகம் கவனம் ஈர்த்தார் மாமியார் வேடத்தில் நடித்திருந்த நடிகை ஸ்வாசிகா. இவர் ஏற்கனவே கோரிப்பாளையம், சாட்டை, போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தமிழில் ஸ்வாசிகாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் ஸ்வாசிகாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, சஞ்சனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, மதன் கணேஷ் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்திருந்தார். சீன் ரோல்டன் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.
ராயன் - துஷரா விஜயன்:
ஹீரோயினாக நடிப்பவர்களால் மட்டுமே நடிப்பில் ஸ்கோர் செய்ய முடியும் என்கிற நினைப்பை 'ராயன்' படத்தின் மூலம் அடியோடு மாற்றி காட்டியுள்ளார் துஷரா விஜயன். நடிகர் தனுஷ் தன்னுடைய 50-ஆவது படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடிகை துஷரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படத்தில் துஷரா விஜயனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஓம் பிரகாஷ் ஒளிபதிவு செய்திருந்த இந்த படத்திற்கு. பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே வரவேற்பை பெற்றன. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 90 கோடி பட்ஜெட்டில் தயாரித்த நிலையில், இப்படம் சுமார் 160 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
அமரன் - சாய் பல்லவி :
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தை, உலக நாயகன் கமலஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்திருந்தார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை விட அனைவராலும் அதிகம் பாராட்டப்பட்டது சாய்பல்லவியின் எதார்த்தமான நடிப்பு தான். மேலும் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற கதாபாத்திரமாகவே மாறி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி, பல ரசிகர்களின் கண்களை கலங்கச் செய்தார் சாய் பல்லவி. இப்படம் இதுவரை சுமார் 400 கோடி வரை வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜே பேபி - ஊர்வசி:
பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற திரைப்படம் 'ஜெ பேபி'. நடிப்பு ராட்சசி என அழைக்கப்படும் ஊர்வசி தான் இந்த படத்தின் கதையின் நாயகி. அப்பத்தாவாக நடித்திருந்த இவரை சுற்றி நடக்கும் கதை தான் இந்த படம். இந்த படத்தை சுரேஷ் மாரி என்பவர் இயக்கிய நிலையில்; அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்,தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெஸ்டாஸ் மீடியா மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் - நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்திற்கு, ஜெயநாத் சேது மாதவன் என்பவர் ஒளிப்பதிவு செய்ய, சண்முகம் வேலுசாமி படத்தொகுப்பு செய்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ஊர்வசியின் நடிப்பு இப்படத்தின் பலமாக பார்க்கப்பட்டது.