அரண்மனை 4




பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியான படங்கள் தோல்வியை தழுவிய நேரத்தில் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை கொடுத்தது சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4. இப்படத்தில் குஷ்பு, தமன்னா, ராஷி கண்ணா, விடிவி காமேஷ், கோவை சரளா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து இருந்தார். இதற்கு முன்பான அதே அரண்மனை படத்தின் டெம்பிளேட் தான் என்றாலும் வெகுஜனத்தை திரையரங்குகளுக்கு வரவைத்தது இப்படம். மேலும் இந்த ஆண்டில் 100 கோடி வசூல் ஈட்டிய படம் அரண்மனை 4 என்பது கவனிக்கத்தக்கது. 


கருடன்




விடுதலை படத்திற்கு பின் சூரி நடித்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படம் கருடன். சூரியை ஆக்‌ஷன் ஹீரோவாக இப்படம் அடையாளம் காட்டியது என்றே சொல்லலாம். குறைந்த வரவேற்பு மட்டுமே இருந்து பின் மக்களின் பாராட்டுக்களைப் பெற்று பெரியளவில் ஹிட் ஆகிய கருடன். சசிகுமார் , உன்னி முகுந்தன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். 


மகாராஜா




கடந்த ஜூன் மாதம் வெளியாகிய விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் இன்றுவரை வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவான இப்படம் தமிழ் , தெலுங்கு , இந்தி என தற்போது சீன ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுராக்‌ கஷ்யப் , அபிராமி , நட்டி , சிங்கம் புலி , உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். உலகளவில் இதுவரை 150 கோடிக்கும் மேல் மகாராஜா வசூலித்துள்ளது


ராயன்




தனது 50 ஆவது படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்தார். காலிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷன் , துஷாரா விஜயன் , செல்வராகவன் , சரவணன் , பிரகாஷ் ராஜ் , வரலட்சுமி சரத்குமார் , அபர்ணா பாலமுரளி என பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். வடசென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் படமாக உருவான ராயன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொடர்ந்தது. உலகளவில் 160 கோடி இப்படம் வசூலித்து தனுஷின் கரியரில் உச்சம் தொட்ட படமாக அமைந்தது 


டிமாண்டி காலய்ணி 2




கோப்ரா படத்தின் தோல்விக்குப் பின் அஜய் ஞானமுத்து இயக்கிய படம் டிமாண்டி காலணி 2. எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான முதல் பாகம் பெரியளவில் வெற்றி பெற்றது. அஜய் ஞானமுத்து இயக்கிய முந்தைய படம் பெரிதாக கவனம்பெறாத காரணத்தினால் டிமாண்டி காலணி 2 படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த்து. ஆனால் முதல் படத்தில் இருந்த அதே ஹாரரை இரண்டாம் பாகத்திலும் கொண்டுவந்து ரசிகர்களை கவர்ந்தார் இயக்குநர். அருள்நிதி , பிரியா பவாணி சங்கர் என இரு நடிகர்களுக்கு தேவையான வெற்றிப்படமாக அமைந்தது இப்படம். உலகளவில் 85 கோடி வரை இப்படம் வசூலித்தது. 


வாழை




பட்டி தொட்டி எல்லாம் ஹிட் என்று சொல்வார்களே. அந்த மாதிரியான ஒரு ஹிட் அடித்தது மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் ஒரு வாழைத்தார் சுமக்கும் ஒரு சிறுவனின் வாழ்க்கையை மையக் கதையாக கொண்டிருந்தது. மாரி செல்வராஜின் மனைவி திவ்யா செல்வராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார். திரையரங்கில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஓடி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் பட்டியலில் இடம்பிடித்தது வாழை. 5 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ 40 கோடிக்கும் மேல் வசூலித்தது


தி கோட்




இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் , சினேகா , பிரபுதேவா , பிரசாந்த் , மோகன் , மீனாக்‌ஷி செளதரி , லைலா , ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இரட்டை வேடங்களில் விஜய் , டீ ஏஜீங்  இப்படத்தின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. விஜய் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவதற்கான ஒரு படமாக அமைந்தது தி கோட். உலகளவில் 455 கோடி வசூலித்தது. 


லப்பர் பந்து 




ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் நடித்து தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து திரைப்படம் இந்த ஆண்டு எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம் என்று சொல்லலாம். கிரிக்கெட்டை மையப்படுத்தி வந்த சென்னை 28 படத்திற்கு பின் நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாகவும் அதே நேரத்தில் சமூக கருத்துக்களை பேசிய படமாகவும் லப்பர் பந்து அமைந்தது. 


மெய்யழகன்




96 இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி அரவிந்த் சாமி இணைந்து நடித்த படம் மெய்யழகன் . கத்திச்சண்டை , ரத்தம் என தமிழ் சினிமாவே போர்க்களமாக இருந்தபோது உரையாடல்களையும் உணர்வுகளை மட்டுமே மையமாக வைத்து நகர்ந்த படம் மெய்யழகன் . படத்தின் நீளம் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தாலும் மெய்யழகன் படம் மற்ற படங்களைக் காட்டிலும் தனித்துவமான முயற்சியாக இருந்ததே அப்படத்தின் பலமாக அமைந்தது. 


அமரன் 




சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய படம் அமரன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்தார். மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பான் இந்திய வெற்றிபெற்றது.