லவ்வர் - பிரபுராம் வியாஸ்


கேப்டன் மில்லர் , அயலான் , லால் சலாம் என அடுத்தடுத்து படங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை தவறியபோது வெளியானது லவ்வர். பிரபு வியாஸ் இயக்கி மணிகண்டன் , ஶ்ரீ கெளரி பிரியா , கண்ணா ரவி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஒரு காதல் அன்பாக இல்லாமல் வன்முறையாக மாறுவதும் விருப்பமே இல்லாவிட்டாலும் அந்த உறவில் இருந்து வெளியேறும் வலியை சொன்ன படம் லவ்வர். கமர்சியலாக இருக்க வேண்டும் என்பதற்காக போலியாகவோ மிகைப்படுத்தாமலோ கதைசொன்னதில் இயக்குநர் பிரபுராம் வியாஸுக்கு பாராட்டுக்கள். நடிப்பு , பின்னணி இசை, பாடல்கள் என படத்தின் ஒவ்வொரு அம்சமும் தனித்துவமாக அங்கீகரிக்கப்பட்டது லவ்வர் திரைப்படம்.


ஜே பேபி - சுரேஷ் மாரி


சுரேஷ் மாரி இயக்கத்தில் வெளியான ஜே பேபி படம் இந்த ஆண்டின் சிறந்த படம் என்றே கூட சொல்லலாம். சாயம் பூசாமல் ஒரு கதையின் உண்மைத்தன்மைக்கு உச்சபட்ச நேர்மையுடன் இருந்தபடம் ஜே பேபி. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவான இப்படம் பல்வேறு ஆழமான உணர்வுகளை கையாண்டது. தங்கள் நிலத்தை இழப்பது மனிதர்களின் வாழ்க்கையை பற்றில்லாமல் செய்துவிடுகிறது, அப்படியான ஒரு பெண் தனது வீட்டைவிட்டு காணாமல் போகிறார். அவரை தேடி அவரது இரண்டு மகன்கள் செல்கிறார்கள். உறவுகளுக்குள் ஏற்படும் பிளவுகளை சரிசெய்ய மனிதர்களின் தவிப்பை மிக எளிய திரைமொழியில் சொன்ன படம் ஜே பேபி. தன் வாழ்நாளுக்குமான ஒரு நடிப்பை இப்படத்தில் ஊர்வசி வெளிப்படுத்தி இருக்கிறார்.


ப்ளூ ஸ்டார் (ஜெய்குமார்) & லப்பர் பந்து (தமிழரசன் பச்சமுத்து)


இந்த ஆண்டு கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இரு படங்கள். மையக்கரு , பேசும் அரசியல் என இரு படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் அதனதன் அளவில் தனித்துவமான படங்கள் இரண்டும். ஜெய் குமார் இயக்கி அசோக் செல்வன் , சாந்தனு , கீர்த்தி பாண்டியன் நடித்த ப்ளூ ஸ்டார் ஒரு பீரியட் கதை. கிரிக்கெட் என்கிற விளையாட்டு ஒருபக்கம் தேச ஒற்றுமைக்கான கருவியாக பார்க்கப்பட்டு வந்த அதே நேரத்தில் அதற்குள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருந்த ஒரு கதையை பேசியது இப்படம். 


மறுபக்கம் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து திரைப்படம் முழுக்க முழுக்க மக்களை என்டர்டெயின் செய்த ஒரு படம். கிரிக்கெட் , காமெடி , தனித்துவமான கதாபாத்திர வடிவமைப்பு , அங்கங்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசப்பட்ட அரசியல் , ஷான் ரோல்டனின் பின்னணி இசை என ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட அனுபவம்.


பைரி - ஜான் கிளாடி


நல்ல விமர்சனங்களைப் பெற்றும் போதுமான கவனம்பெறாத படம் ஜான் கிளாடி இயக்கிய பைரி. நாகர்கோயிலை மையமாக வைத்து நடக்கும் பைரி அங்கமலி டைரீஸ் , ஆடுகளம் போன்ற படங்களுக்கு நிகரான ஒரு கதைக்களத்தை பேசியது. புறா பந்தையத்தை தங்கள் உயிருக்கும் மேலாக நினைக்கு இளைஞர்கள் , அவர்களுக்கு இடையில் வலுக்கும் பகை என நமக்கு நெருக்கமான ஒரு கதையை பேசியது. சிறிய பட்ஜெட்டில் இவ்வளவு பெரிய கதைக்களத்தை மிக சிறப்பாகவே கையாண்டிருந்தார்கள்.


ஜமா - பாரி இளவழகன்


பாரி இளவழகன் இயக்கி நடித்த படம் ஜமா . தங்கள் உயிருக்கும் மேகாக கூத்துக் கலைஞர்கள் தனிபட்ட வாழ்க்கையில் அதிகாரம் , ஏற்றத்தாழ்வுகளை பின்பற்று மனிதர்களாகவும் இருந்துவிடுகிறார்கள். தனது கலைக்கு நிஜ வாழ்க்கையில் எந்வித வித்தியாசமாசமும் இல்லாமல் வாழும் ஒருவனைப் பற்றிய கதை ஜமா. பாரி இளவழகன் ஒரே படத்தில் தன்னை ஒரு நல்ல இயக்குநராகவும் நல்ல நடிகனாகவும் நிரூபித்திருக்கிறார்.