2024


2024-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில்  பல்வேறு முக்கியமான படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் சில படங்கள் ஆஸ்கர் வரை செல்ல தகுதியான படங்களாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சைன்ஸ் பிக்‌ஷன் முதல் பீரியட் டிராமா வரை முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்தப் படங்களின் வரிசையைப் பார்க்கலாம்


இந்தியன் 2




ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் முக்கியமான படங்களில் ஒன்று. சித்தார்த், ரகுல் ப்ரீத், பிரியா பவானி ஷங்கர், எஸ், ஜே சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா , மாரிமுத்து உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது


தங்கலான்




பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவோது உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதன் 26 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.


அயலான்




சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கியிருக்கும் படம் அயலான். கருணாகரன் , ரகுல் ப்ரீத் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏலியன் குறித்த ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


லால் சலாம்




ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ,  நடித்துள்ள படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டும் பொங்கல் ரேஸில், அயலான் படத்துடன் மோத இருக்கிறது, லால் சலாம் திரைப்படம்


கங்குவா




சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வேட்டையன்




சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து த.செ ஞானவேல் இயக்கும் படம் வேட்டையன். ரஜினியின் 170-வது படமான இதில் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன் , ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ரானா டகுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


விடுதலை 2




வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


கேப்டன் மில்லர்




அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஷிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் . ஜி .வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


தளபதி 68






விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது . ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரஷாந்த், பிரபுதேவா, மீனாக்‌ஷி செளதரி, உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். 


விடாமுயற்சி




அஜித் குமார்  நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு அஸர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேணி இயக்கும் இப்படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். த்ரிஷா, அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார்கள்.