அனிருத்
தற்போதைக்கு தமிழ் சினிமாவை தன் இசையால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். தொடர்ச்சியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைப்பது, அப்படியே ஒரு டிக்கெட்டைப் போட்டு பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு மாஸாக மியூசிக் போட்டு வருவது, இந்தப் பக்கம் விஜய் , கமல்ஹாசன், அப்டியே ஒரு யூடர்ன் போட்டு ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது, அப்டியே இண்டிகேட்டரை போட்டு சின்ன சின்னப் படங்களில் பாடி வருவது என திரும்பும் பக்கம் எல்லாம் அனிருத் தான்.
தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் துபாயில் நடைபெற இருக்கும் தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகி வருகிறார். அடுத்த ஆண்டும் பிப்ரவரி மாதம் துபாயில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹூக்கும் பாடல் வைரலானதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஹூக்கும் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பியானோ கடையில் சேட்டை
என்னதான் இரவு பகலாக வேலை செய்து வந்தாலும் அனிருத் வைப் செய்ய தவறுவதே இல்லை. அப்படிதான் பியானோ கடை ஒன்றில் புகுந்து சேட்டை ஒன்றை செய்து வந்திருக்கிறார் அனிருத். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அனிருத் “1993 முதல் தனது இளமைக் காலத்தில் இருந்து ஏதாவது பியானோ கடைக்கு போய் அங்கிருக்கும் ஒரு பியானோவை வாசித்துப் பார்த்துவிட்டு அப்புறமாக வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே ஜூட் விட்டுவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.
அதே போல் இந்த வீடியோவில் ஒரு பியானோ கடைக்குச் சென்று ஒரு பியானோவில் அமர்ந்து ‘போ நீ போ’ பாடலை வாசித்துவிட்டு அப்படியே நைஸாக வெளியேறிவிடுகிறார் அனிருத். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வேட்டையன்
தற்போது அனிருத், ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171, ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தியன் 2, அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.