கொரோனா காலத்திற்கு பின் இந்த ஆண்டு திரையரங்கங்களுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக இருந்திருக்கிறது என்று சொல்லலாம் . மிகப்பெரிய மாஸ் பட்ஜெட் திரைப்படங்களும் சரி அறிமுக இயக்குநர்கள் இயக்கிய படங்களும் சரி திரையரங்கங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்திருக்கின்றன. சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள வெற்றி திரையரங்கம் இந்த ஆண்டு தங்களது டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் அதிக டிக்கெட் விற்பனை மற்றும் அதிக நாட்கள் ஓடியப் படங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
10. விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி , விஜய் சேதுபதி நடித்து வெளியான விடுதலைத் திரைப்படம் இந்த வரிசை 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. நகைச்சுவை நடிகரிலிருந்து ஹீரோவாக மாறிய சூரி. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் , இளையராஜாவின் காட்டுமல்லி , வெற்றிமாறனின் பிரம்மாண்டமான கண்ணோட்டத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்கம் மற்றும் ஓடிடி என இரண்டிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
9.டி டி ரிடர்ன்ஸ்
சந்தானம் நடிப்பில் வெளியான ஹாரர் காமெடி படம் டிடி ரிடர்ன்ஸ். ஒரு சில தோல்விகளுக்குப் பிறகு சந்தானம் மீண்டும் தன்னுடைய தில்லுக்கு துட்டு சீரிஸில் வெற்றிபெற்ற படம். திரையரங்கம் மற்றும் ஆகிய இரு தளங்களில் மிக அதிகமான பார்வையாளர்களைப் பெற்றது இந்தப் படம். ஹாரர் ,கேம் ஷோ என வித்தியாசமான ஒரு முயற்சியாக இருந்த டிடி ரிடர்ன்ஸ் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
8.மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியவர்கள் நடித்து வெளியானத் திரைப்படம் மாமன்னன். இதுவரை பார்த்திராத புதிய கோணத்தில் வடிவேலு, ரத்தினவேலுவாக வடிவேலு என மாமன்னன் படம் மிகப்பெரிய விவாத களத்தை உருவாக்கியது.
7.மாவீரன்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , அதிதி சங்கர், யோகி பாபு, மிஸ்கின் , சரிதா உள்ளிட்டவர்கள் நடித்த படம் மாவீரன், வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் சமூக பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து அதே நேரத்தில் ஒரு சிறிய சூப்பர் ஹீரோ அம்சத்தையும் சேர்த்து புதிய அனுபவத்தை கொடுத்தது மாவீரன் படம்
6. மாரிக் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் , எஸ்.ஜே சூர்யா நடித்து வெளியான மார்க ஆண்டனி 100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. டைம் டிராவலை மையப்படுத்தி பீரியட் டிராமாக உருவான இந்தப் படம் டிரெண்ட் செட்டராக அமைந்தது.
5. துணிவு
இந்த ஆண்டின் தொடக்கமே திரையரங்கத்திற்கு சிறப்பாக தான் அமைந்தது. எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் இந்த ஆண்டு ஒரு சிறந்த ஓப்பனிங்காக அமைந்தது.
4 வாரிசு
துணிவு படத்துடன் மோதிய விஜய் நடித்த வாரிசு படம் இந்த வரிசையில் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வம்சி படிப்பல்லி இந்தப் படத்தை இயக்கி சரத்குமார், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்து தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.
3.பொன்னியின் செல்வன் -1
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஒரு திரைப்படமாக அமைந்தது. விக்ரம் , ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஷோபிதா, பார்த்திபன், காலிதாஸ் ஜெயராமன், விக்ரம் பிரபு, என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்
2. லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வசூல் ரீதியாக இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்தாலும் லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
1. ஜெயிலர்
இந்த ஆண்டு எல்லா போட்டிகளையும் கடந்து தனித்து நிற்கும் ஒருபடம் என்றால் சூப்பர்ஸ்டார் நடித்த ஜெயிலர். பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து குறைவான எதிர்பார்ப்புகளே இருந்த நிலையில் ரிபீட் ஆடியன்ஸை இழுத்தார் ரஜினிகாந்த். வசூல் ரீதியாக 600 கோடிகளைக் கடந்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்கில் 50 நாட்கள்வரை ஓடியது. .