2023ஆம் ஆண்டு பான் இந்திய அளவில் வெளியான திரைப்படங்களில் பாலிவுட் சினிமாவைத் தாண்டி தென்னிந்திய சினிமா பெரும் ஆதிக்கம் செலுத்தியது.


ஆதிக்கம் செலுத்திய தென்னிந்திய படங்கள்


ஷாருக்கான் முதல் ரன்பீர் வரை கம்பேக் கொடுத்ததில் பாலிவுட் படிப்படியாக மீண்டிருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்கள் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாஸ் ஹிட் அடித்தன.


இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான வாரிசு, துணிவு படங்கள் தொடங்கி, பொன்னியின் செல்வன், ஜெயிலர், லியோ என தமிழ் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கைபோடு போட்டன. அதேபோல் தெலுங்கு சினிமாவில் இருந்தும் ஆதிபுருஷ், வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி என பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்கள் குவிந்தன.


ரூல் செய்த நடிகர்கள்




மற்றொருபுறம் கேஜிஎஃப் மூலம் பாக்ஸ் ஆஃபிஸில் வேறொரு தளத்துக்கு உயர்ந்த கன்னட சினிமாவில் இருந்து இந்த ஆண்டு கப்ஸா, க்ராந்தி, சப்த சாகரதாச்சே யெல்லோ உள்ளிட்ட படங்களும், மாற்று சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மலையாள சினிமாவில் ரோமஞ்சம், கண்ணூர் ஸ்குவாட் ஆகிய படங்கள் பிற மொழி ரசிகர்களையும் ஈர்த்து கமர்ஷியல் ஹிட் அடித்தன.


வசூல் ஒருபுறம் இருக்க, தென்னிந்திய சினிமாவில் இருந்து மம்மூட்டி, விஜய், அஜித், நானி, சிவகார்த்திகேயன் என நடிகர்கள் இந்த ஆண்டு திரையில் மாஸ் காண்பித்து அப்ளாஸ் அள்ளினர். இந்நிலையில், தனியார் சினிமா செய்தி ஊடகமான பிங்க்வில்லா (PinkVilla) இணையதளம் இந்த ஆண்டின் சிறந்த நடிகர் யார் என நடத்திய கருத்துக் கணிப்பில் சுவாரஸ்யமான விஷயமாக, இந்த லிஸ்ட்டில் இல்லாத ஒரு நடிகர் முதலிடம் பிடித்துள்ளார். .


விஜய்யை முந்திய பிரபாஸ்!




பாகுபலிக்குப் பிறகு பல ஆண்டுகளாக வெற்றிப்படம் கொடுக்க முடியாமல் பிரபாஸ் (Prabhas) திண்டாடி வந்த நிலையில், சலார் படத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு இறுதியில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கன்னட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமாகவும், பான் இந்திய திரைப்படமாகவும் வெளியான இப்படம் இதுவரை 550 கோடிகளை பாக்ஸ் ஆஃபிஸில் வசூலித்துள்ளது. 8 நாள்களைக் கடந்து இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில் பிங்க் வில்லாதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் நடிகர் பிரபாஸ் 72 சதவீத வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார். நடிகர் விஜய் 25 சதவீத வாக்குகளுடன் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 


இவர்களுக்கு அடுத்தபடியாக ஹாய் நன்னா, தசரா படங்களுக்காக 2 சதவீத வாக்குகளுடன் நடிகர் நானியும், ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் 1 சதவீத வாக்குடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹிட் கொடுத்துள்ளதுடன், பிங்க்வில்லா தளத்தின் கருத்துக் கணிப்பில் பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.