யசோதா படத்தில் சமந்தாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசி இருக்கிறார்.
ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார். ஹரிஹரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உட்பட பலரும் நடித்துள்ளனர். மணிசர்மா இசையில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பிரோமோஷன் பணிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை ஊடகத்திடம் பகிர்ந்து இருக்கிறார்.
சமந்தாவிடம் கதை சொன்னதற்கான காரணம் என்ன?
‘யசோதா’ படத்தை பான் இந்தியா அளவில் வெளியிடவும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். ’ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸ் மூலமாகவும் அவர் தேசிய அளவில் சமந்தா கவனத்தை ஈர்த்து இருந்தார். ஆனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா இல்லையா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அசமந்தா எல்லாருடையக் கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் மகேந்திரா எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.
செப்டம்பர் மாதம் 8 ம் தேதி கதையை கேட்ட சமந்தா உடனேயே நடிக்க ஒத்துக் கொண்டார். மேலும், பல மொழிகளில் வெளியாவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பல முக்கியமான நடிகர்களைத் திரைக்கதையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தோம்.
‘யசோதா’ படத்தில் சமந்தாவுடன் வேலை பார்த்தது அனுபவம் எப்படி இருந்தது?
’யசோதா’ படத்தின் கதையைக் கேட்ட நொடியில் இருந்து அவர் கதையுடன் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார். ’சாகுந்தலம்’ படம் முடித்ததும் அவருடைய கவனம் முழுவதும் இந்தப் படம் மீதுதான் இருந்தது.
சமந்தாவின் உடல்நலன் குறித்து நிறையத் தகவல் வந்துள்ளது. படத்தின் வெளியீட்டின் போது அவர் இல்லாமல் இருப்பது எப்படி இருக்கிறது?
சமந்தாவின் உடல்நிலைப் பற்றி அவர் படம் முடித்ததும், டப்பிங்கின் போது தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் சொன்னோம். ஆனால், அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால், மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார்.அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். சமந்தாவின் உடல்நிலை, பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு சில நாட்கள் முன்புதான் எங்களுக்கும் தெரிய வந்தது. இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்.
‘யசோதா’ படத்தின் கதை என்ன? வாடகைத் தாய் வியாபாரம் பற்றி கூற வருகிறதா?
அப்படி கிடையாது. வாடகைத் தாய்க்கு பின்னால் நடக்கும் குற்றங்களைப் பற்றி நாங்கள் சொல்ல வருகிறோம்.
‘யசோதா’வுக்காக பெரிய செட் அமைத்திருக்கிறீர்கள். ஏன்?
பெரும்பாலான மருத்துவமனைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக கட்டிட அமைப்பு மற்றும் சகல வசதிகளோடு இருக்கின்றன. கொரோனாவின் மூன்றாம் அலைக்கு மத்தியில் நாங்கள் இந்தப் படத்தை எடுக்க வேண்டி இருந்தது. அந்த சமயத்தில் நாங்கள் மருத்துவமனையில் படமாக்கி இருந்தால், நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்திருக்கும். அதனால், நாங்கள் செட் அமைத்து 55 நாட்கள் படமாக்கினோம். கலை இயக்குநர் அஷோக் அற்புதமான செட்டை உருவாக்கினார்.” என்று பேசினார்.