ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் கடந்த ஐந்து மாதங்களாக போராட்டம்  நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக உடன்படிக்கைக்கு வந்துள்ளது.


ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர்கள் போராட்டம்



  • திரைப்பட ஸ்டுடியோக்கள் அடிப்படையாக சில எழுத்தாளர்களை ஒரு குறிபிட்ட காலத்திற்கு உத்தரவாதமான  பணியில் அமர்த்த வேண்டும்.

  • தொலைக்காட்சி தொடர்கள்,திரைப்படங்கள்,மற்றும் ஓ.டி.டி யில் தங்கள் பனியாற்றிய நிகழ்ச்சிகள் பெரும் வெற்றிபெற்றால் அதில் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

  • அதே நேரத்தில் திரைக்கதை எழுத்துப் பணிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படக்கூடாது.


ஆகிய கோரிக்கைகளை ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பினருக்கு இடையிலும் பேச்சுவார்த்தை பலனளிக்காத கடந்த மே 2 ஆம் தேதி எழுத்தாளர்கள் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 11,500  எழுத்தாளர்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் போராட்டம் சுமார் 146 நாட்களாக நடைபெற்று வந்தது.


இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையிலான ஒப்பந்தத்திற்கான திட்டம் முன்வைக்கப்பட்டதால் போராட்டத்தை திரும்பபெற முடிவு செய்துள்ளது எழுத்தாளர்கள் சங்கம்.


 


அடுத்து என்ன






இந்தப் போராட்டத்தின் காரணத்தினால் ஏற்கனவே திரைப்பட தயாரிப்பு சார்ந்திருக்கும் பல தொழிலாளர்கள் பெரியளவிலான இழப்பை சந்தித்துள்ளார்கள். மேலும்  நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருந்த ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் மாதிரியான பிரபல வெப் சிரீஸ்கள் நிலுவையில் இருந்து வருகின்றன. மேலும் காலம் தாழ்த்த விரும்பாத தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்த பிரச்சனைகளுக்கு முடிவு காணும் வகையில் உடன்படிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன.


முறையான ஒரு ஒப்பந்தம் வரையறை செய்யப்பட்டு அனைத்து ஊழியர்களிடமும் வாக்களிப்பு மூலம் இந்த உடன்படிக்கை கையெழுத்திட முடிவு  செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி திரைப்பட எழுத்தாளர்களுக்கு வேலை உத்தரவாதம் ,  லாபத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வு, மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் பயன்பாடு குறைப்பு முதலிய கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன தொலைக்காட்சி நிறுவனங்கள்.  


முடிவுக்கு வருமா நடிகர்களின் போராட்டம்


திரைக்கதை எழுத்தாளர்களின் போராட்டம் முடிவு வந்திருந்தாலும் அது பாதி கடலைத் தாண்டியதுப் போல்தான் மறுபக்கம் தங்களது தனிப்பட்ட கோரிக்கைகளுடன் போராட்டக் கொடியை ஏந்தி இருக்கிறார்கள் ஹாலிவுட் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர்கள். 1 லட்சம் 60 ஆயிரம் நடிகர்களை உள்ளடக்கிய நடிகர்களின் சங்கம் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஒரே நேரத்தில் எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் போராட்டத்தை  ஹாலிவுட் சினிமா கடந்த 63 வருடங்களில் எதிர்கொண்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.