உலக தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு எத்தனை துன்பங்கள் இருப்பினும் தற்கொலை எண்ணங்களைக் கடந்து வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக தற்கொலை தடுப்பு தினம்
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஒப்புதலின் பெயரில் சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினத்தை அனுசரிக்கிறது. செயல்களின் வழி நம்பிக்கை என்பதே இந்த அமைப்பின் முக்கியக் கொள்கையாக இருந்து வருகிறது. நமது செயல்களின் மூலம் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கும் தற்கொலைக்கு மாற்றாக வாழ்க்கையின் மீது நம்பிக்கை அளிக்கவும் முயற்சிக்கிறது இந்த அமைப்பு.
இந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சேர்க்க வேண்டிய அவசியத்தை பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன்.
தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல் நொடிகூட தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். ‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்வுக்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள். ‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உயிரின் சுபாவம் இன்பம் – தேவதேவன்