உலகின் மிக முக்கியமான ஆளுமைகள் என்று தேர்வு செய்து வந்தோமானால் அதில் நிச்சயமாக இவரது பெயர் இருக்கும். அந்த பட்டியலை கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கி ஒவ்வொருவராய் கழித்துக் கொண்டே வந்தால் கடைசியாக ஒருவர் மட்டுமே இருப்பார். அந்த ஒருவரின் பெயர் இளையராஜா. இதை சொன்னது  இயக்குநர் தியாகராஜா குமாரராஜா. இதில் மாற்றுக் கருத்து இருப்பவர்கள் இருக்கலாம். இங்கு விவாதப்பொருள் அது இல்லை.


இளையராஜா போன்ற ஒருவரை வைத்து இப்படியான ஒரு மதிப்பீட்டை ஒருவர் சிந்திக்கிறார் என்பது எவ்வளவு வியக்கத்தக்க ஒரு விஷயம். இளையராஜா ஏன் எல்லா காலத்திலும் பாராட்டப்படுகிறார். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தும் அவர் ஏன் மேஸ்ட்ரோவாக போற்றப்படுகிறார்,


அடிப்படைகளைப் பின்பற்றுவது




இளையராஜாவுடன் வேலை செய்த அத்தனை இயக்குநர்களும் அவரைப் பற்றி ஆச்சரியமாக பேசுவது, இன்றுவரை ஒவ்வொரு படத்திற்கு இசையமைக்கும் போது தனது கைப்பட இசைக்குறிப்புகளை எழுதுகிறார் என்பது தான். கிரிக்கெட் வீரர்கள் ஓயாமல் சென்சுரி அடித்தாலும்,  டக் அவுட் ஆனாலும் ஸ்டிக் டு தி கேம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்லி வருவதை நாம் கவனித்திருப்போம்.  இதுவே இளையராஜாவின் தாரக மந்திரம். அதுபோலத்தான் இசையமைப்பது என்று வந்துவிட்டால் இசை குறிப்புகளை எழுத வேண்டும் . இதை இந்தத் தலைமுறை இசையமைப்பாளர்கள் எத்தனைபேர் செய்கிறார்கள் என தெரியவில்லை. 


கடின உழைப்பு


இன்று நாம் புகழ்ந்து பேசும் இளையராஜா , கமல்ஹாசன் என யாரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் அடிப்படையில் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். அவர்களின் திறமை சார்ந்து எந்தக் கேள்வியை நாம் கேட்டாலும் அவர்கள் தங்களது ஏதாவது ஒரு வாழ்க்கை அனுபவத்தை தான் பதிலாக கூறுகிறார்கள். ஒருவரிடம் அதிக அனுபவங்கள் இருக்கிறதென்றால் அந்த அளவிற்கு அவர் தனது தொழிலில் உழைத்திருக்கிறார் என்று அர்த்தம்.


அப்டேட்டில் இருப்பது


ஒரே நேரத்தில் அறிமுக இயக்குநர் முதல் மாஸ்டர் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைப்பவர் இளையராஜா. இளையராஜா எப்படி எல்லா காலத்திலும் பொருந்தக் கூடியவராக இருக்கிறார் என்றால் தனக்கு முந்தையத் தலைமுறையினருடன் உரையாடிய அனுபவம், தன் சமகாலத்தினருடன் உரையாடுவது அடுத்தத் தலைமுறையினரிடம் இருந்து கற்றுக்கொள்வது. என மூன்று தலைமுறையுடனும் தன்னை தொடர்பில் வைத்திருப்பதால் தான். ஒரு படத்தின் கதை எப்படியாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அதற்கு தன் இசை மூலமாக எப்படி அர்த்தம் கொடுக்க முடியும் என்பதே அவரது நோக்கமாக இருக்கும்.


இசை பயிற்சி




இன்று இருக்கும் இசையமைப்பாளர்களில் பலர் முறையாக பயிற்சிபெறாதவர்களே. பயிற்சி இல்லாதவர்களை குறைசொல்வதல்ல நோக்கம். ஆனால் ஊற்றிருந்தால் தானே தண்ணீர் வரும். இளையராஜாவின் எல்லா இசையும் ஏதோ ஒருவகையில் கர்நாடக இசையில் ஒரு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே இருந்த கர்நாடக இசையை அனைத்துத் தரப்பு மக்களுக்கு கொண்டு சேர்த்தவரும் இளையராஜா தான்.


யார் இசைமேதை ?




சீன எழுத்தாளர் நாட்சுமே சொசேகியின் புகழ்பெற்ற வரி ஒன்று இருக்கிறது.


“அதிகளவிலானப் புத்தகங்களை படிப்பதனால் மட்டுமே ஒருவர் சிறந்த மனிதராகிவிட முடியாது “.  கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிபெற்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள்  இருக்கிறார்கள். ஆனால் திரையிசையில் ஏன் ஒரு மனிதரின் பெயர் இத்தனை ஆண்டுகளாக இத்தனை மக்களிடம் நிலைத்து நிற்கிறது. அறிவு என்று சொல்வதா, ஆற்றல் என்று சொல்வதா அறிவிற்கு அப்பாற்பட்ட அந்த ஆற்றலை எந்த சொல்லால் குறிப்பிடுவது. இப்படிச் சொல்லலாம்.


எந்த ஒரு  நபர்  காலத்தில் நீடித்து மனிதர்களின் மனதிடம் தன்னை ஒரு  நினைவாக பதிக்கிறாரோ அவரே இசைமேதை.அவரே கலைஞர். அவரே இசைஞானி இளையராஜா.