மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் உலக அளவில், வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றன. அதேநேரம், காமிக்ஸ் விற்பனையில் அந்நிறுவனத்திற்கு முன்னோடியாக இருக்கும், டிசி நிறுவனமோ திரையுலகில் தனக்கென நிலையான இடத்தை இதுவரை உறுதி செய்யாமல் தவித்து வருகிறது. மோசமான தலைமை மற்றும் முறையான நிர்வாகம் இல்லாததே, அந்நிறுவனத்தின் படங்கள் முறையாக வெளியாகமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.


வண்டர் உமன் வசூல் சாதனை:


இந்த மோசமான சூழலுக்கு மத்தியிலும் 2013ம் ஆண்டு வெளியான, சூப்பர் மேன் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட மேன் ஆஃப் ஸ்டீல் திரைப்படம் பெரும் வெற்றியை பதிவு செய்ததோடு, அன்றைய தேதியில் ரூ.5.5 ஆயிரம் கோடியை வசூல் செய்தது. ஆனால், அதையும் மிஞ்சி யாரும் எதிர்பாராத விதமாக, 2017ம் ஆண்டு கேல் கேடட் நடிப்பில் வெளியான வண்டர் உமன் திரைப்படம் உலக அளவில் ரூ.6.8 ஆயிரம் கோடி வசூலை வாரிக்குவித்தது. ரசிகர்களின் பெரும் ஆதரவு காரணமாக, உடனடியாக அப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2020ம் ஆண்டு வெளியான வண்டர் உமன் திரைப்படம், மோசமான திரைக்கதை,  ஒரே நேரத்தில் திரையரங்குகள் மற்றும் HBO மேக்ஸ் தளத்தில் வெளியானது ஆகிய காரணங்களால், உலக அளவில் மொத்தமாகவே வெறும் ரூ.1.4 ஆயிரம் கோடியை மட்டுமே வசுலித்தது. ஆனாலும், அப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என டிசி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.


சீர்திருத்தத்தில் இறங்கியுள்ள வார்னர் ப்ரோஸ்:


இதனிடையே, பல்வேறு நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி தவிக்கும் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, டேவிட் ஜாஸ்லா அண்மையில் பொறுப்பேற்றார். அந்நிறுவனத்தின் ஒரு அங்கமாக உள்ள டிசி நிறுவனத்தை, மார்வெலை போன்று பிரமாண்டமாக மாற்ற அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்காக, மார்வெலின் கார்டியன்ஸ் ஆஃப்தி கேலக்ஸி திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சாஃப்ரான் ஆகியோரை, டிசி நிறுவனத்தின் புதிய தலைவர்களாக நியமித்துள்ளார். இந்த இருவரும் சேர்ந்து, டிசி சார்பில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வெளியாக உள்ள படங்களுக்கான பட்டியலை தயாரித்து வருகின்றனர்.


வண்டர் உமன் - 3 திரைப்படம் ரத்து?:


இந்நிலையில் தான், ஜேம்ஸ் கன் தயாரித்து வரும் டிசி திரைப்படங்களுக்கான புதிய பட்டியலில், வண்டர் உமன் படத்திற்கு இடமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வண்டர் உமன் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதையை இயக்குனர் பேட்டி ஜென்கின்ஸ் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனத்திடம் வழங்கியுள்ளார். ஆனால், அந்த கதை புதியதாக வெளிவர உள்ள டிசி திரைப்படங்களுக்கு ஒத்து வராது என தயாரிப்பு நிறுவனம் கதையை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரசிகர்களிடையே நன்கு பிரபலமான வண்டர் உமன் கதாபத்திரத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து படங்களை எடுப்பதை விட, புதிய கதாபாத்திரங்களுக்கு படங்களை வெளியிடவே டிசி நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கேல் கேடட் நடிக்கும் வண்டர் உமன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, இனி தனிப்படம் வராது என பரவி வரும் தகவலால், அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.