பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால் அங்கு நடைபெற்ற தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. அனைவரும் எதிர்பார்த்தபடியே, குஜராத் தேர்தலில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.


மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 154 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதன் மூலம் வரலாறு படைத்திறுக்கிறது பாஜக.  இந்த தேர்தலில், பல கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிகழ்ந்திருக்கிறது.


இந்திய அரசியலையும் கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. பல கிரிக்கெட் வீரர்கள் இந்திய அரசியலில் ஜொலித்திருக்கிறார்கள். அதன் தொடரச்சியாக, இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.


போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்திருக்கிறார் ரிவபா. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட முதலில், அவர் பின்தங்கியிருந்த போதிலும், வாக்குகள் எண்ண அவரின் வெற்றி உறுதியானது. பதிவான வாக்குகளில் 60 விழுக்காடு வாக்குகளை பெற்ற பெரிய வெற்றியை பெற்றுள்ளார். 


ஜம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் 84,000க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். அந்த தொகுதியில் இரண்டாவது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் உள்ளனர். கடந்த தேர்தலில், பாஜக வேட்பாளராக தர்மேந்திர சிங் ஜடேஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 


இந்த முறை, ஜடேஜாவின் மனைவி ரிவபாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தொகுதியில், ஜடேஜாவின் மனைவியை எதிர்த்து ஜடேஜாவின் தந்தையும் தங்கையும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். இருப்பினும், அந்த தொகுதியில் ரிவபா வெற்றி பெற்றுள்ளார்.


அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதால், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்த தேர்தலில், 154 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் 6 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பலத்த போட்டி காணப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் அது சற்று குறைவாகவே இருந்தது.


2017 தேர்தலில், 99 தொகுதிகளில் பாஜகவும் 78 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், இந்த முறையோ முடிவுகள் முழுவதுமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் ஆம் ஆத்மி ஏற்படுத்திய தாக்கம் என்றே கூறப்படுகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே இடையே நிலவிய மும்முனை போட்டி இறுதியில் பாஜகவுக்கு சாதமாக அமைந்துள்ளது.


பொதுவாக நகர்ப்புற தொகுதிகளை பொறுத்தவரை, பாஜக பலம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் காங்கிரஸ் அதிக பலத்துடன் காணப்படும். ஆனால், இந்த முறை நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பாஜகவே வெற்றிபெற்றுள்ளது.