ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் வேட்டையன் ராஜாவை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி. 2005ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். வேட்டையன் ராஜா என்பவரின் கதையை வைத்து எடுக்கப்பட்ட சந்திரமுகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கிட்டதட்ட 800 நாட்களுக்கும் மேல் ஓடிய சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். அது இப்போது சாத்தியமாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சந்திரமுகி 2 படத்தை தயாரித்து வருகிறது. இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இப்படத்தின் ஹீரோவாக நடித்து வருகிறார். சந்திரமுகியாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், ராதிகா என ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் 'சந்திரமுகி 2' படத்தில் இணைந்துள்ளனர்.
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள சந்திரமுகி2 வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி திரைக்கு வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சந்திரமுகி2 படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் ராஜாவாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், "ராஜாதி ராஜா, ராஜ கம்பீர, ராஜா மார்த்தாண்ட, ராஜ குல திலக... வேட்டையன் ராஜா பராக் பராக் பராக்!" என கூறப்பட்டிருந்தது.
சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.