கவிப்பேரரசு, காப்பிய கவிஞர், கவிக்கு அவர் ஒரு சாம்ராட் என புகழப்படும் வைரமுத்துவுக்கு இன்று பிறந்த நாள்.
மண்ணில் வைரம் பிறப்பது போல், தேனி மாவட்டம் வடுகபட்டியில் பிறந்த கருப்பு காவியம் தான் இந்த வைரமுத்து. தனது எழுத்துகள் ஒவ்வொன்றிலும் முத்துக்களை பதித்ததால் என்னமோ வைரமுத்து என்ற பெயர் இவருக்கு சரியாக பொருந்தியது. மண் வாசம் மாறாத படங்களை எடுத்த பாரதிராஜாவின் நிகழ்கள் படத்தில் ’இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடல் மூலம் தமிழ் திரையுலகில் தனது முதல் பாடல் வரிகளை வைரமுத்து எழுதினார். வைரமுத்துவை பற்றி பல சுவாரிய தகவல்கள் இருந்தாலும், முதல் பாடல் எழுத கிடைத்த வாய்ப்பை இக்கட்டான சூழலில் இருந்ததாக அவரே பகிர்ந்து கொண்டுள்ளார்.
வைரமுத்துவின் முதல் பாடல்
தான் எழுதிய கவிதைகளை பாரதிராஜாவிடம் கொடுத்த வைரமுத்து, முடிந்தால் என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். பொதுவாக ஒருவேலைக்கு அல்லது சினிமாவில் வாய்ப்பு கேட்பவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தான் கேட்பது வழக்கம். ஆனால், வைரமுத்துவோ, தனது கவிதை தொகுப்புகளை கையில் கொடுத்துவிட்டு முடிந்தால் என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள் என கூறி முதல் சந்திப்பிலேயே பாரதிராஜாவை தன் பக்கம் இழுத்து விட்டார். அவரின் இந்த அணுகுமுறை நிழல்கள் படத்தில் வைரமுத்துவுக்கு பாடல் எழுத வாய்ப்பு தேடி வந்தது.
முதல் பாடல், முதல் மகன் பிறந்த நாள்
அந்த தருணத்தில் வைரமுத்துவின் மனைவி பொன்மணி பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்தாராம். சினிமாவில் பாடல் எழுத வேண்டுமென இத்தனை நாள் காத்திருந்ததுக்கு கிடைத்த வாய்ப்பு முக்கியமா இல்லை பிரசவ வலியில் துடிக்கும் மனைவி முக்கியமா என சற்று தடுமாறிய வைரமுத்து, மனைவியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு பாரதிராஜாவை பார்க்க சென்றுள்ளார். ஹோட்டல் அட்லாண்டாவுக்கு சென்ற வைரமுத்துவிடம், இளையராஜா மெட்டுகளை போட்டுக்காட்டியுள்ளார். உடனே வைரமுத்துவின் மனதில் தோன்றிய வரிகள் தான் ‘ இது ஒரு பொன்மாலை பொழுது’. முதல் சந்திப்பு மற்றும் பாடல் மூலம் வைரமுத்துவின் கவி ஆளுமையை உணர்ந்த இளையராஜா அவருடன் இணைந்து பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். முதல் பாடலை எழுதி கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு சென்ற வைரமுத்துவுக்கு மகன் பிறந்திருந்தது தெரிய வந்தது. அவர் தான் முதல் மகன் கார்க்கி. தனது மகனையும், முதல் பாடலையும் ஒரே தருணத்தில் பெற்று எடுத்ததால், வைரமுத்து இரட்டிப்பு மகிழ்ச்சியை அனுபவித்தார்.
சினிமாவில் புரட்சி செய்த கவிஞர்
அதன்பிறகு இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா கூட்டணி முதல் மரியாதை, மண் வாசனை கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, சிந்து பைரவி போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டை கலக்கின. அகரம் இப்போ சிகரம் ஆச்சு, இதோ இதோ என் பல்லவி, காதல் வந்தால் சொல்லி அனுப்பு, அன்பென்ற மழையிலே, நூற்றாண்டுக்கு ஒருமுறை, நதியே காதல் நதியே, இருபது கோடி நிலவுகள் கூடி, தொடு தொடுவெனவே, இன்னிசை பாடிவரும், சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், காதம் கடிதம் கேட்டவே, புது வெள்ளை மழை, சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே, வெட்டி வேரு வாசம், பூங்காத்து திரும்புமா, அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன், தஞ்சாவூர் மண் எடுத்து என தமிழ் திரையுலகில் சுமார் 7,500க்கும் மேற்பட்ட பாடல்களை தந்து கவிக்கு தனி சாம்ராஜ்ஜியத்தையே படைத்துள்ளார். இரட்டை கிளவி அர்த்தத்திலும், எதுகை, மோனை, தன்னிலை, முன்னிலை, படர்கையை, வலி மிகும் மற்றும் மிகா இடங்களில் வார்த்தைகளில் சரியாக கையாண்டு பாடல்களை எழுதுவதிலும் வைரமுத்துவுக்கு நிகர் அவர் தான்.
கவி சம்ராட்டின் படைப்புகள்
இதனால் என்னமோ, வைரமுத்துவை ‘காப்பியக் கவிஞர்’ என்று அப்துல் கலாமும், ‘கவிப்பேரரசு’ என கருணாநிதியும், ‘கவி சாம்ராட்’ என அடல் பிகாரி வாய்பாயும் புகழ்ந்துள்ளனர். 7 முறை தேசிய விருதுகளை வாங்கி குவிந்த இவர், தமிழ் மண்ணின் விருதுகளையும் விட்டு வைக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலை மற்றும் தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் என 3 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே கவிஞர் இவர் தான். 19 வயதிலேயே வைகறை மேகங்கள் என்ற கவிதை தொகுப்பு புத்தகத்தை கொடுத்த வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியங்களை படைத்து கிராமத்து பெண்ணாக இருந்தாலும் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றார். சாகித்ய அகாடமி விருது பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவல் இந்தியாவின் 23 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாவலுக்காக இந்தியாவின் மிகச்சிறந்த புத்தகதுக்கான ‘ஃபிக்கி (FICCI)’ விருதையும் பெற்றுள்ளார்.
தாய்க்கு ஒரு கவிதை
தனது தாய்க்காக “ ஆயிரம் தான் கவி சொன்னேன், பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலையே... நெஞ்சு ஊட்டி வளத்த உன்ன நெனச்சா அழுக வரும்.... வைகை இல ஊரு முழுக.... வல்லோரும் சேர்த்து எழுக...கை பிடிச்சு கூட்டி வந்து கர சேர்த்து விட்டவளே.... எனக்கு ஒன்னு ஆனதுன உனக்கு வேறு பிள்ளை உண்டு ...உனக்கு ஒன்னு ஆனதுன எனக்கு வேறு தாய் இருக்கா...........?” என கவிதை வரிகளில் தாய்ப்பாசத்தை தரணியெங்கும் பதித்தவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.