2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அஜித்துக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த பில்லா படத்தைப் போல் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அஜித்தின் கேரியரில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்த படங்களில் பில்லா 2 வும் ஒன்று. அது ஏன்?
கதை என்ன
முதல் பாகத்தில் மிகப்பெரிய டானாக இருக்கும் பில்லா எப்படி இவ்வளவுப் பெரிய ஒரு கேங்ஸ்டராக ஆனார் என்கிற முன்கதையே இரண்டாம் பாகத்தின் கதை. முதல் பாகத்தின் அளவிற்கே நேர்த்தியான திரைக்கதை அமைக்கப்பட்டது தான் பில்லா இரண்டாம் பாகம். ஆனால் படத்தின் முக்கியமான குறைகள் என்று சொல்வதற்கு சில அம்சங்கள் இருக்கின்றன. அதில் சில
அடையாளம் தெரியாத நடிகர்கள்
பில்லா 2 படத்தை இயக்கியவர் சக்ரி டோலெடி. அஜித் குமார், வித்யுத் ஜம்வால், பார்வதி ஓமனக்குட்டன், ப்ருனா அப்துல்லா, யோக் ஜபி தாண்டி நமக்கு முகமோ, பெயரோ தெரியாத எத்தனையோ நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். பில்லா படத்தின் தோல்விக்கு முதல் காரணம் இதுவே. ஏற்கனவே முதல் பாகத்தில் நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான் என ஒரு குழுவை பார்த்த ரசிகர்கள் இரண்டாவது பாகத்திலும் தங்களுக்கு தெரிந்த நடிகர்களையே படத்தில் எதிர்பார்த்தார்கள். அவர்கள் இல்லாத ஒரு உலகத்தை ஏற்றுக்கொள்வது ரசிகர்களுக்கு சற்று கடினமாக இருந்தது.
முன்கதைகளுக்கு பழகாத மக்கள்
பில்லா முதல் பாகம் வெளியானபோது ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா என்கிற மிகப்பெரியப் படம் ஆதரவாக இருந்தது. மேலும் பில்லா படத்தின் வெற்றி ரசிகர்களுக்கு போதுமானதாக இருந்தது. அதற்கடுத்த பாகத்தை ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் பாகத்தின் அறிவிப்புக்குப் பிறகு மக்கள் எதிர்பார்த்தது முந்தைய பாகத்தில் இருந்து முன் நகரும் கதையையே தான். ஆனால் படம் பில்லாவின் கடந்த காலத்தை சொல்கிறது. முந்தைய பாகத்தில் இளைஞனாக இருந்தவர்கள் இன்னும் வயது குறைந்தவராக இருக்க வேண்டிய இரண்டாம் பாகத்தில் பில்லாவிற்கு அண்ணன் போல் இருந்தார்கள்.
படத்தில் என்ன குறைபாடு
ஒரு கேங்ஸ்டராக உருவாகும் பில்லாவின் தனிப்பட்ட வாழ்க்கை படத்தின் டைட்டில் கார்டில் மட்டுமே காட்டப்படுகிறது. அதைத் தவிர்த்து படத்தில் பில்லா தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிகொள்கிறார் என்கிற எந்த பக்கமும் காட்டப்படுவதில்லை. மேலும் நினைத்தை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும் அசாத்தியமான கதாபாத்திரமாக இருக்கிறது. அடுத்து அடுத்து என வரிசையாக காட்சிகள் பொறுமையில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் எந்த காட்சியிலும் நம்மால் ஒன்ற முடிவதில்லை.
கவனிக்கத் தவறியவை
முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இரண்டாம் பாகத்தின் ஒளிப்பதிவு மிக சிறப்பானதாகவே அமைந்திருக்கிறது. ஆர். டி ராஜசேகர் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். மேலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை முதிர்ச்சியாக அமைந்திருக்கிறது . பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். வசனங்கள் சரியான தருணத்தில் பயன்படுத்தப் பட்டிருந்தால் இன்னும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 11 ஆண்டுகளை மெளனமாகவே தான் கடந்து வந்திருக்கிறது பில்லா 2..!