அஜித் - மோகன்லால் இணையும் ஏகே61 படப்பிடிப்பு ஆரம்பிக்க இருப்பதாக அரசல் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு இன்னும் கொஞ்சம் தூபம் போடும் வகையில், அந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ள போனி கபூர், மோகன்லாலை சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நம்மூரில் அஜித் அல்டிமேட் என்றால் மலையாளத்தில் லாலேட்டன் அட்டகாச, ஆசம் ஹீரோ. மோகன்லாலை மோலிவுட் ரசிகர்கள் லாலேட்டா என்றுதான் செல்லமாக அழைக்கிறார்கள். நாமும் அழைக்கலாம். மம்மூட்டியை மம்முக்கா என அழைக்கிறார்கள். அற்புதமான நடிகர்களை அப்படி ஆத்மார்த்தமாக அழைத்தால் தான் என்ன?
சூப்பர் ஸ்டார், உலக நாயகம், தல, தளபதி என்று நாமும் பட்டமெல்லாம் கொடுத்துள்ளோமே!
போனி கபூர், எச்.வினோத், அஜித்.. மாஸ் கூட்டணி:
போனி கபூர், எச்.வினோத், அஜித் ஆகியோர் முதல்முறையாக ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் கூட்டணி அமைத்தனர். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்போதே, இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
பாலிவுட்டின் ரீமேக்கான ‘பிங்க்’ படம், நேர்கொண்ட பார்வை என்று தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இதே கூட்டணியில், ‘வலிமை’ திரைப்படம் உருவானது. இந்தப் படத்தின் பணிகள் 2019ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா, ஊரடங்கு பல்வேறு இன்னல்களால் படப்பிடிப்புகள் தடைப்பட்டு வந்தது. அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து படப்பிடிப்பு முடிவடைந்தது. வலிமை(Valimai) படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற படக்குழு, முழு படப்பிடிப்பையும் முடித்தது.
வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. வலிமை ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வலிமை’ படத்தின் ஷூட்டிங்போதே, போனி கபூர், ஹெச்.வினோத், அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவலை போனி கபூர் உறுதி செய்துள்ளார். தனது அடுத்தப்படமும் மீண்டும் அஜித், எச்.வினோத் உடன்தான் என்று தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது போனி கபூர் கூறினார். இது அஜித்தின் 61ஆவது படமாக இருக்கும் சூழலில், போனி கபூர், மோகன்லாலை சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித்தின் 61வது படத்தில் மோகன்லால் ஒரு நெகட்டிவ் ரோலி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளியான ப்ரோ டாடி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு முன்னதாக அவர் மரக்கார் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு அஜித் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.