சமீபத்தில் வெளியான சூப்பர் ஹீரோ படமான மின்னல் முரளி படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வரும் நடிகர் டொவினோ தாமஸ், பாலிவுட் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தன்னை போன்ற ஹீரோ தேவை என்றால் அப்போது பாலிவுட் சினிமாவில் நடிப்பேன் என மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் டொவினோ தாமஸ் 2012 ஆம் ஆண்டு வெளியான பிரபுவின்டே மக்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதையடுத்து 7வது நாள், என்னு நிண்டே மொய்தீன், உயரே மற்றும் மாயாநதி போன்ற படங்களில் அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. என்னு நிண்டே மொய்தீன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். மாயநதியில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதையும், பிலிம்பேர் விமர்சகர் விருதையும் பெற்றுள்ளார். தமிழ் படத்தை பொருத்தவரை மாரி 2, லூசிஃபர், ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்த வரிசையில் தற்போது டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. முதன் முதலில் மலையாள திரையுலகில் சூப்பர்மேன் கதைக்களத்தை தேர்தெடுத்துள்ளனர். அதுவும் சிறப்பாகவே கையாளப்பட்டுள்ளது என்ற விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்தை இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அஜு வர்க்கீஸ், நம்மூர் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகியுள்ள இப்படம் அனைவருக்கும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தி சினிமா உட்பட புதிய பிரதேசங்களுக்குள் நுழையும் யோசனைக்கு தயாராக இருப்பதாக டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பாலிவுட் திரையுலகம் அற்புதமான திரைப்பட தயாரிப்பாளர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு என்னைப் போன்ற ஒரு நடிகர் தேவை என்றால் மட்டுமே நான் அதை செய்வேன்” எனத் தெரிவித்தார்.
ஆஸ்கார் விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ படத்தில் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். இப்படம் அடுத்த ஏப்ரல் மாதம் வெளிவரும் எனத் தெரிகிறது. இதில் அமீர்கானின் நண்பராக முக்கிய கதாப்பாத்திரத்தில் நாக சைதன்யா நடித்துள்ளார். இதற்கு முன்பு இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு டொவினோ தாமஸிற்கு சென்றுள்ளது. ஆனால் அவர் ஏற்கெனவே மின்னல் முரளி படத்தில் கமிட் ஆகியிருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாலிவுட்டில் எனக்கு ஒரு பெரிய படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் இல்லை என்று சொல்ல வேண்டியிருந்தது. ஏனென்றால் நான் மின்னல் முரளி படத்தின் ஷூட்டிங் நடுவில் இருந்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் நான் அதை வேண்டாம் என்று சொல்ல வேண்டியிருந்ததால் அதில் நடிக்கமுடியாமல் போய்விட்டதே என்ற ஏமாற்றம் எனக்கு இருக்கிறது. அப்போது எனக்கு வேறு வழி இல்லை. நான் அதை செய்ய விரும்பினாலும், மின்னல் முரளியிடம் நான் சமரசம் செய்து கொள்ளாததில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.