நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்ட பிறகு முதன்முதலாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். 


நடிகை நயன்தாரா தனது சொந்த வாழ்விலும் திரையுலகிலும் பல்வேறு இன்னல்களை சந்தித்து கடந்து வந்தவர் என்பதை அனைவரும் அறிவோம். அன்புக்கு ஏங்கும் மனம் என்பது யாருக்கும் விதிவிலக்கல்ல. அதுபோல நயன்தாராவும் இளம் வயதில் காதலில் விழுந்தார். அதன் பிறகு அதிலிருந்து விலகி தனது திரை பயணத்தையும் வாழ்க்கைப் பயணத்தையும் ஒரு சேரவே கடத்தி வந்தார். மீண்டும் அன்புக்கான தேடல். அதுவும் முறையாக கைகூடவில்லை. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல காதல் தேர்வில் நயன்தாராவுக்கும் சறுக்கல் ஏற்பட்டது. 


காதலிப்பது தவறில்லை; யாரை காதலிக்கிறோம் என்பதில்தான் தவறு இருக்கிறது என்ற வசனத்திற்கு ஏற்ப, நயன்தாராவின் காதலன் தேர்விலும் சொதப்பல் இருந்தது. ஆனால் இறுதியாக அவருக்கான உண்மையான காதல் கைகூடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். 


 


                                                                                                 


ஆம், எப்படியாவது நல்ல இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு காத்திருந்த விக்னேஷ் சிவன் என்ற நபருக்கு, தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் நேரம் ஒதுக்கி இருந்தார் நயன்தாரா. நயன் மேடத்துக்கு கதை பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; அவரை பார்த்து விட்டால் போதும் என்ற ஏக்கத்துடன் ஆட்டோவில் வந்து இறங்கினார் விக்னேஷ் சிவன். முதன் முதலாக தொழிலுக்காக சந்திப்பை ஏற்படுத்தி கொண்டாலும் அது அவர்களின் வாழ்வில் ஒரு பந்தத்தை ஏற்படுத்தும் என இருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 


படத்தின் கதையை சொல்லும்போது கதையையும் அதை படமாக்கும்போது விக்னேஷ் சிவனையும் நயன்தாராவுக்கு பிடித்து போனது. ஏற்கனவே காதலில் அடிமேல் அடி வாங்கிய நயன்தாராவுக்கு விக்னேஷ் மீதான காதலை உலகிற்கு வெளிப்படையாக சொல்வதற்கு தயக்கமோ, பயமோ இருந்திருக்கலாம். ஏகப்பட்ட விமர்சனங்கள் அவரை சூழாமல் இல்லை. அனைத்திற்கும் விளக்கம் கொடுத்து அதை பெரிதாக்க நினைக்காமல் அமைதியாக கடந்து சென்றதே அவருக்கான பாசிட்டிவ் எனர்ஜியாய் நிற்கின்றது. திருமணம் முடியும் வரை ஒரு இடத்திலும் விக்னேஷ் சிவன் மீதான காதலை நயன்தாரா நேரடியாக வெளிப்படுத்தவில்லை.



                                                             


ஆனால் ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்ததும் கண்டுகொண்டேன் என்ற வரிகளுக்கு ஏற்ப நயன்தாராவின் மீதான காதலை அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கம் மூலம் வெளிப்படுத்தாமல் இருக்க தவறியதில்லை. கோயில், மசூதி, சர்ச், வெளிநாடு எனப் பல்வேறு ஊர்களுக்கும் பறந்து பறந்து இந்த காதல் ஜோடி காதல் செய்தது. 


எங்கேயோ இருந்து வந்த விக்னேஷ் சிவனுக்கு அடித்தது லக்கு, நயன்தாராவே அவருடைய காதலியாக கிடைத்துவிட்டார், அப்புறமென்ன அவருக்கு கவலை என்பது எல்லாம் வெறும் வாய்ப் பேச்சாக தான் இருக்க முடியும். 


காயப்பட்ட யாராக இருந்தாலும் அவ்வளவு எளிதில் மீண்டு வர முடியாது. யாரையும் நம்பவும் மாட்டார்கள். அப்படி இருக்கும் நயன்தாராவின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன? விக்னேஷ் சிவன் தனது உண்மையான காதலை புரிய வைத்திருக்க வேண்டும் அல்லவா. இதற்கு முன்பு நயன்தாராவை காதலித்தவர்கள் அனைவரும் அவரை பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதை உண்மை என நம்பி நயன்தாராவும் ஏமாந்து இருக்கலாம்.



                                         


 


எல்லோரைப் போலவும் ஒரு நடிகையாக வந்த நயன்தாரா முதலில் எடுத்த ஆயுதம் கிளாமர். எந்த அளவிற்கு இறங்க வேண்டுமோ அந்த அளவுக்கு இறங்கினார். ஒரு கட்டத்தில் அது கை கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய அடிகள் பட்டார். நயன்தாரா எப்படி என்பதற்கு நானும் ரவுடிதான் என்ற படம் சிறந்த எடுத்துக்காட்டு. அதில் நயன்தாராவின் நடிப்பை முழுமையாக ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 


இதற்கு முன்பு சிலம்பரசன் இயக்கிய வல்லவன் படத்திலும் பிரபுதேவா இயக்கிய வில்லு படத்திலும் நயன்தாராவிற்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கும், விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கும் இருக்கும் வித்தியாசத்தை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன்பிறகுதான் நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களிலும் கிளாமர் அல்லாத கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 




தொடர்ந்து அறம், டோரா, வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம், ஐரா, விசுவாசம், மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் என முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியும் பெற்றார். ஐயர்ன் லேடி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 


அனைவரும்தான் பிரச்சினைகளை சந்திக்கிறோம் தினந்தோறும். ஆனால் நயன்தாராவை மட்டும் கொண்டாடுவது ஏன் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஒவ்வொருவரும் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கேள்விகளையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு நயன்தாரா ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. 


நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி 2015ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 


அதையடுத்து இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியை புகைப்படம் எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் அல்லல் பட்டனர். கூட்ட நெரிசலில் பவுன்சர் ஒருவர் கீழே விழுந்தார். அதைப் பார்த்த நயன்தாரா பார்த்து.... பார்த்து... என பதறி போய் தூக்க முற்பட்டார். ஆனால் அதற்குள் பவுன்சர் சுதாரித்துக் கொண்டு எழுந்து விட்டார். 


 


                       


இதையடுத்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நயன்தாரா "எங்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இதுவரை நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. இனியும் உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்" என கேட்டுக்கொண்டார். 


தொடர்ந்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் "இந்த ஹோட்டலில் வைத்து தான் நயன்தாராவை முதன் முதலில் பார்த்தேன். அவரிடம் இங்குதான் நானும் ரவுடிதான் என்ற கதையை சொன்னேன். அதனால் எங்களின் முதல் செய்தியாளர் சந்திப்பு இங்கே இருக்கவேண்டும் என எண்ணினேன். உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றி." என்றார்.