தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிப்பது என்பது எப்போதுமே பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. சிவாஜி-எம்.ஜி.ஆர்.ன் கூண்டுக்கிளி தொடங்கியே இந்த எதிர்பார்ப்பு எப்போதும் ரசிகர்களிடம் இருந்து வந்தது உண்டு. அதை அடுத்து ரஜினி-கமல், அஜித்-விஜய், ஆகியோர் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது எனலாம். இந்த வரிசையில் சிம்பு-தனுஷ் நடிப்பிலும் அப்படி ஒரு படத்தை நீண்ட நாட்களாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
2012லேயே சிம்புவும் தனுஷும் இணைந்து நடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்து வந்த நிலையில் அது பல்வேறு காரணங்களால் கைகூடாமல் போனது. அதுகுறித்து அண்மையில் மனம் திறந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.
“2012ல் சிம்பு மற்றும் தனுஷை வைத்து வடசென்னை படத்தை இயக்குவதாக இருந்தது. தனுஷை வைத்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. அப்போதுதான் சிம்பு காளை படத்தில் பிஸியாக இருந்தார். மேலும் வேறு சில கமிட்மெண்ட் காரணமாக சிம்பு சில மாதங்கள் அமெரிக்க செல்ல வேண்டியதாக இருந்தது. அதே நேரம் படத்தின் தயாரிப்பாளரும் நிறுவனத்தை இழுத்து மூடுவதாக முடிவுசெய்ததால் படம் கிடப்பில் போடப்பட்டது. 2015ல் தனுஷுடன் மீண்டும் வடசென்னை தொடங்கப்பட்டாலும் சிம்பு மீண்டும் தனுஷை அழைத்து படத்தில் வேறு ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க முன்வந்தார். ஆனால் அந்த சமயம் நான் திரைக்கதையை மாற்றி எழுதியிருந்தேன்.அதனால் தனுஷின் அன்பு கதாப்பாத்திரத்துக்கு வலுவான எதிரியாக இருந்த கதாப்பாத்திரம் அதனால் கைவிடப்பட்டது. அதனால் இருவரும் ஒரே படத்தில் நடிக்கும் வாய்ப்பும் பறிபோனது” என்கிறார்.
சிம்பு தனுஷ் இருவருமே இயக்குநர்கள் என்பதால் இருவரும் இணைந்து நடிப்பது எளிதாக அமைந்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு மீண்டும் உருவாகாமலேயே போனது என்கிறார் அவர்.
தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தை முடித்துவிட்டு 'பாத்து தலை', 'கொரோனா குமார்' என அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் ‘விடுதலை’ படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ளது.