திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி,  மண்ணச்சநல்லூர் பேரூராட்சிகள் என இரண்டு பேரூராட்சிகள் உள்ளன. சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் 18 வார்டுகளையும் உள்ளடங்கியுள்ளன. இன்றோடு இறுதி பிரச்சாரம் நிறைவு பெறும் நிலையில், வரும் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.




இரண்டு பேரூராட்சிகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு  ஆதரவாக மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன், மொத்தமுள்ள 33 வார்டுகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதாக கூறி, சக வேட்பாளர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையெனக் கூறி, அதிமுக , பாஜக, நாம் தமிழர் கட்சி ,அமமுக , புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென திரண்டனர்.


புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், தேர்தலை ரத்து செய்யக்கோரி, அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தேர்தல் விதிமீறலை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்றும் அப்போது வேட்பாளர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார்,  புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 


நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், திடீரென தேர்தலை ரத்து செய்யக்கோரி வேட்பாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டது, மணச்சநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் திமுக இல்லாத, அதிமுக, பாஜக, நாம் தமிழர், புதிய தமிழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திரண்டு மறியல் போராட்டம் நடத்தியதும், அவர்கள் முன் வைத்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை என்ன என்பதை அறிய வேண்டிய சூழலில், இதுவரை அவர்களின் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் தரப்பில் வேறு விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது. 


இருப்பினும் அது தொடர்பாக விசாரணை நடத்திய பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண