ரோகிணி :


1976-ல் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானவர் நடிகை ரோகிணி . அதன் பிறகு கதாநாயகியாக நடித்த ரோகிணி , முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுக்கவும் செய்தார். இவர் பிரபல குணச்சித்திர மற்றும் வில்லனாக நடித்து அசத்திய ரகுவரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார்.






மணமுறிவு :


திருமணம் ஆன ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ரகுவரனின் போதைப்பழக்கம் உள்ளிட்ட சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை விட்டு ரோகிணி 2004 இல் , விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு தனியாக வசித்து வந்த ரகுவரன் கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 




விவாகரத்திற்கு காரணம் :


இந்த நிலையில் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய ரோகிணி  பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பேசியிருந்தார்.அந்த வன்முறையால்தான் ரகுவரை விட்டு பிரிந்ததாகவும் ,குடும்ப மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் இதனை வெளியே சொல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். மேடையில் ரோகிணி பேசியதாவது “ஒரு பெண் குழந்தை வளரும்போது, ​​அவளது கணவன் வீட்டிற்கு சென்றால் இந்த வேலைகளை செய்ய சொல்லி வளர்க்கப்படுகிறாள். பெண்களுக்கான சுதந்திரம் எல்லா இடங்களிலும் மறுக்கப்படுகிறது. மேலும் அவன் நுழைந்த வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பல போராட்டங்களுக்குப் பிறகு அந்தப் பெண் ஒரு வார்த்தை பேசினால், அவளை சமூகம் தவறாக சித்தரித்து விடுகிறது. இதில் ஒரு சிலர் வேண்டுமானால் முற்போக்கான குடும்பத்தில் வாழலாம். ஆனால் மீதமுள்ள 90 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே குடும்ப வன்முறையை அனுபவித்துவிட்டு இப்போதுதான் வந்திருக்கிறேன். இனி அங்கு வாழ முடியாது என்று இந்த முடிவை எடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். அந்தக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த பிறகும் இதைச் சொல்ல எனக்கு இவ்வளவு நேரம் பிடித்தது.


பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும் நானே குடும்ப வன்முறையை அனுபவித்திருக்கிறேன். ஆனால் பொருளாதாரத்தில் சுதந்திரம் இல்லாத பெண்களுக்கு என்ன நடக்கும் என்பதை யோசித்து பாருங்கள். நான் எடுத்து சொல்ல வேண்டியிருந்தது. எனது மகனை என்னால்தான் பார்த்துக்கொள்ள முடியும் அவரால் (ரகுவரனால் ) பார்த்துக்கொள்ள முடியாது என்று. எனக்கு அந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை. நான் சொல்ல வேண்டி இருந்தது“ என்றார் ரோகிணி.