கமல்ஹாசன் , மணிரத்தினம் , இளையராஜா என சூப்பர் குட்  ஃபார்முலாவில் வெளியான திரைப்படம்தான் ’நாயகன்’. 1987 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் பின்னணி இசையில் இருந்து பாடல்கள் வரை அனைத்திலும் தனது மாயாஜால வித்தையை காட்டியிருப்பார் இசைஞானி. இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றதும் நினைவுக்கூறத்தக்கது.


நிலா அது வானத்து  மேல!


இந்த படம் இளையராஜாவுக்கு 400-வது படம் . சொல்லவா வேண்டும்? அத்தனை நேர்த்தியாக இசையமைத்திருப்பார். குறிப்பாக அக்காலத்து இளைஞர்களை மட்டுமல்லாமல் , இப்போதைய தலைமுறையை ஈர்க்கும் பாடலாக அமைந்தது நிலா அது வானத்து மேல பாடல் . இந்த பாடல் துள்ளல் இசையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இந்த பாடலை தென்பாண்டி சீமையில பாடலுக்கான மாற்றாகத்தான் இளையராஜா உருவாக்கியிருந்தாராம். ஆனால் மணிரத்தினம் தனக்கு இந்த வரிகள் அனைத்தும் துள்ளல் இசையோடு வேண்டும் , மாற்றித்தாருங்கள் என கேட்க , அதன் பிறகு மாற்றியமைத்தேன் என இளையராஜாவே மேடை ஒன்றில் பகிர்ந்திருந்தார்.







கமல் நடனமாடாமல் போன காரணம் என்ன ?


ஒரு பெப்பியான , ஃபோக் பாடல் வைத்த இயக்குநர் மணிரத்தினம் , ஜனகராஜை மட்டும் குயிலியுடன் ஆட வைத்துவிட்டு , நல்ல நடனம் தெரிந்த கமல்ஹாசனை படகை ஓட்ட வைத்துவிட்டாரே ஏன் ? என உங்களில் பலருக்கு கேள்வி எழும்பியிருக்கலாம். இதைத்தான் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் , மணிரத்னத்திடம் கேட்டார் . இதற்கு பதிலளித்த  மணிரத்தினம் “ அந்த பாடலில் கமல்ஹாசனை ஆட வைக்க வேண்டும் என பல இடங்களில் இருந்தும் எனக்கு அழுத்தம் வந்தது. ஜனகராஜ் எல்லாவற்றையும் துணிந்து செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரம். அவரால் எல்லா ஓவர் டோஸையும் செய்ய முடியும், அவரால் நடனமாட முடியும் , அவரால் கடத்தல் வேலைகளை கூட செய்ய முடியும். அந்த பாடல் ஸ்கிரீன் பிளேயில் இருந்தது. கமல்ஹாசன் கேரக்டர்  அப்படியல்ல“ என்றார் மணிரத்னம்.


மேலும் பேசிய அவர் “கமலுக்கான ஜோடியாக, சரண்யா வைத்த முதலில் ஆடிஷன் பண்ணினோம் . அவங்க அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாங்க “ என்ற கூடுதல் தகவலையும் சொன்னார்.