வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்  ‘மாநாடு’. டைம் லூப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள்  மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெருமளவில் பாராட்டப்பட்டது. 


இந்த நிலையில் அண்மையில் வெங்கட் பிரபு கொடுத்த நேர்காணல் ஒன்றில் மாநாடு படம் மட்டுமல்லாது, சென்னை 28  படத்தின் போது நடந்த சுவாரஸ்சியமான சம்பவங்கள் குறித்து பேசினார். அந்த உரையாடலில் அஜித் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் போது, “ சென்னை 28 படத்தின் போது வெளியே படத்தில் தெரிந்த ஒரே முகம் யுவன் மட்டும்தான். அவரது பாடல்தான் படத்திற்கு மிகப் பெரிய பிரபலத்தை படத்திற்கு தேடிக்கொடுத்தது. எனக்கு ஆர்யா, பிரசன்னா நண்பர்கள் என்பதால் அவர்களே அந்தப் படத்தில் நடிக்க முன் வந்தனர். 




இதற்கெல்லாம் மேலே ஒரு திடிரென்று ஒரு நாள் இன்னொருவர் நம்பரில் இருந்து கால் வந்தது. அதில் பேசிய நபர், நானும் நன்றாக கிரிக்கெட்  விளையாடுவேன் அதனால் எனக்கும்
சென்னை 28 யில் பவுலிங் போட ஒரு சான்ஸ் வேண்டும். கடைசியில் அது யார் என்று பார்த்தால் அஜித் சார். கலாய்ப்பதற்காக அவர் அப்படி பேசியிருக்கிறார். அந்தப் படம் முடிந்த உடனே என்னுடன் படம் பண்ண தயாராக இருந்தார்.




சில தயாரிப்பாளர்களிடமும் என்னை அனுப்பி வைத்து பேசினார். ஆனால் யாரும் என் மீது நம்பிக்கை வைக்க வில்லை. அஜித் சாரும் நானும் ஜி படத்தில் இருந்தே நல்ல பழக்கம். திடீரென்று அவர் எனது வீட்டிற்கு வருவார். காபி சாப்பிடுவார்.. ஷெட்டில் விளையாட கூப்பிடுவார். அப்போது கிண்டலாக எனது மனைவியிடம் அதற்கு அனுமதியெல்லாம் கேட்பார். சென்னை 28, சரோஜா, கோவா போன்ற படங்கள் வெற்றியைப் பெற்றிருந்தாலும் எந்த பெரிய ஹீரோவும் எனக்கு படம் தரவில்லை. எனக்கு படம் தந்த ஒரே ஹீரோ அஜித் மட்டும்தான்.” என்று பேசினார்.