தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நகைச்சுவை நடிகர்களை தங்களோடு வைத்து கொண்டாடி தீர்ப்பார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.


கோலமாவு கோகிலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பர் ரெடின் கிங்ஸ்லி. இவர் நெல்சனின் கல்லூரி காலத்திலிருந்து அவருடன் தொடர்பில் இருக்கிறார். சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை நெல்சன் ஆரம்பித்தபோது அந்தப்  படத்திலேயே கிங்ஸ்லி நடித்திருந்தார். ஆனால் அப்படம் ஏதோ காரணங்களால் நின்றுவிட்டது.


அதன் பிறகு நயந்தாரா நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படம் மூலம் கிங்ஸ்லி பெரிய திரையில் நடிகராக அறிமுகமானார். அவரது வெகுளித்தனமான முகமும், அலட்டிக்கொள்ளாத வசன உச்சரிப்பும் அவர் மீது அனைவருக்கும் ஈர்ப்பை வரவழைத்தது. 




அதன் பிறகு ஒருசில படங்களில் நடித்தாலும் கிங்ஸ்லியை அனைத்து தரப்பினரும் திரும்பி பார்த்தது டாக்டர் படத்தில். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கிங்ஸ்லி மீதான ஈர்ப்பு மட்ட்டும் ரசிகர்களுக்கு குறையவில்லை.


படத்தில் அவர் பேசிய, “அய்யய்யோ மீண்டும் மீண்டுமா”, “எல்லாரும் வாங்க உங்கள்ட்ட ஐஜி மன்னிப்பு கேட்கனுமாம்” போன்ற வசனங்களிலும், பள்ளி மாணவி வேடமிட்டு கிங்ஸ்லி வரும் இடத்திலும் ரசிகர்கள் தங்களை மறந்து சிரித்தார்கள். வைகைப்புயல் வடிவேலுவே கிங்ஸ்லியை அழைத்து பாராட்டியிருந்தார்.


இதனையடுத்து விஜய்யுடன் பீஸ்ட் படத்திலும், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்துவருகிறார். தற்போது நடிகராக அறியப்பட்டாலும் கிங்ஸ்லி அடிப்படையில் ஒரு நடன கலைஞர். அஜித்தின் அவள் வருவாளா படத்தில் ஒரு பாடலுக்கு குரூப் டான்ஸராக பணியாற்றியிருக்கிறார். அதேபோல் ஈவெண்ட் மேனஜராகவும் பணியாற்றியிருக்கிறார்.


கிங்ஸ்லி தற்போது நடித்திருக்கும் படங்கள் அனைத்தும் வெளியான பிறகு அவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உயர்ந்து நிற்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறது கோலிவுட். சாதாரணமாக தனது பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் கிங்ஸ்லி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலர் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.