இந்தி சினிமாவில் நடிகர் சல்மான்கானுக்கு டூப்பாக நடித்துள்ள நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திரையுலகில் மிக ரிஸ்கான சண்டைக் காட்சிகளை நடிகர்களை ஈடுபட வைக்காமல் டூப் நடிகர்களை வைத்து இயக்குநர்கள் படமாக்குவார்கள். அந்த வகையில் நடிகர் சல்மான் கானுக்கு டூப்பாக நடித்தவர் சாகர் பாண்டே. இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் சல்மானுக்கு டூப்பாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் ஜிம்மில் வழக்கம் போல உடற்பயிற்சி கொண்டிருந்த நிலையில் அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
அவர் உடனடியாக சிகிச்சைக்கு மும்பை ஜோகேஸ்வரி கிழக்கில் உள்ள இந்து ஹ்ருதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே ட்ராமா கேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாகர் பாண்டே ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை ஷாருக்கானின் டூப்பாக நடிக்கும் பிரசாந்த் வால்டே உறுதிப்படுத்த பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது.
நடிகர் சல்மான்கான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பஜ்ரங்கி பைஜான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து என்னுடன் இருந்ததற்காக நன்றி..உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சகோதரர் சாகர் என அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் சாகர் பாண்டே மறைவுக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக திரைத்துறையில் உடற்பயிற்சி செய்யும் போது பிரபலங்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது தொடர்கதையாகி வருகிறது.
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இது ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத துயரமாக உள்ள போது, சமீபத்தில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஸ்ரீவஸ்தவாவும் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.