நடப்பாண்டில் இதுவரை வெளியாகி உள்நாட்டிலேயே 100 கோடி வசூல் ஈட்டிய தமிழ் சினிமாவின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ் சினிமா..!
வாரத்திற்கு 2,3 என தமிழ் சினிமாவில் புதுப்படங்கள் அடுத்தடுத்து வெளியாவதில் எந்த பற்றாக்குறைய்ம் இல்லை. சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என வேறுபாடு இன்றி அடுத்தடுத்து படங்கள் வெளியாகின்றன. ஆனால், அவை அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, பெரிய வசூல் ஈட்டுவதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே வசூலை வாரிக்குவிக்கின்றன. அந்த வகையில் தற்போது வரை நடப்பாண்டிலும் குறைந்தபட்சம் 100 படங்கள் வரை வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றில் வெறும் நான்கு படங்கள் மட்டுமே இந்திய சந்தையில் மட்டும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளன.
04. துணிவு
அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அஜித்தின் வித்தியாசமான லுக், அவருக்கு உள்ள ரசிகர் பட்டாளம் மூலம் இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது. இதனால், இந்திய சந்தையில் மட்டும் இந்த படம் 144 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சில தரவுகள் தெரிவிக்கின்றன.
03. வாரிசு:
துணிவு படத்திற்கு போட்டியாக பொங்கல் பண்டிகை தினத்தன்று, விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. வம்சி இயக்கத்தில் வெளியான இப்படம் மெகாசீரியல் போன்று இருப்பதாக விமர்சனங்கள் குவிந்தன. ஆனால், விஜயின் நட்சத்திர பிம்பத்தின் காரணமாக இந்த படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. அதன்படி, வாரிசு படம் இந்தியாவில் மட்டும் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.
02. பொன்னிய்ன் செல்வன் 2:
ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும், மணிரத்தினம் இயக்கத்தில் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் மல்டி-ஸ்டாரராக வெளியானது பொன்னியின் செல்வன் 2. முதல் பாகம் அளவிற்கு இந்த படம் வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன்படி, இந்த படம் இந்திய அளவில் மட்டும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
01. ஜெயிலர்:
இறுதியாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 10ம் தேதி, ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படம் வெளியானது. இந்த படமும் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், சூப்பர் ஸ்டார் என்ற ஒற்றை பிம்பம் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி பிடித்தது. அதோடு கடந்த வாரம் புதியதாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதன் காரணமாக தற்போது வரை அந்த படம் இந்தியாவில் மட்டுமே ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
ஆண்டு இறுதியில் வசூல் வேட்டையா?
மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் கலவயான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், முன்னணி நடிகர்களின் படங்கள் மீதான எதிர்பார்ப்புகள் காரணமாக வசூலை குவித்துள்ளது. இந்நிலையில் தான் அடுத்த வெளியாக உள்ள சில தமிழ் சினிமாக்கள், இதுவரை இல்லாத அளவிலான உச்சபட்ச எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த படங்கள் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ:
நடப்பாண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் முதலிடத்தில் இருக்கும் படம் லியோ. விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வெளியாவதற்கு முன்பே வியாபாரத்தில் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, லோகேஷின் எல்சியு-விலும் லியோ படம் இணையும் என கூறப்படுவதால், இந்த படம் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது. இதனால், இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே சர்வ சாதரணமாக 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கேப்டன் மில்லர்:
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படமும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள இப்படமும் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயலான்:
இன்று நேற்று நாளை எனும் வெற்றிப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். அறிவியல் புனைவுக் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஒருவேளை இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தால், அயலான் படமும் வசூலை அள்ளும் என நம்பலாம்.