தமிழ் சினிமாவில் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி மீண்டும், மீண்டும் ரசிக்கத் தோன்றும் டாப் ஜோடிகளில் தல அஜித் - ஷாலினி தம்பதிக்கு எப்போது தனி இடம் உண்டு. அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த அமர்களம் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே, 2002ல் அஜித், ஷாலினி திருமணம் செம்ம கிராண்டாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய ஷாலினி சிறந்த குடும்பத் தலைவியாகவும், அனோஷ்கா, ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து வருகிறார்.


தன்னுடைய குடும்பத்தின் மீது கேமரா வெளிச்சம் படுவதில் அஜித்துக்கு விருப்பம் இல்லை. அவர் பெரிதாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதில்லை, ஆனால் பல வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவி தொலைக்காட்சியில் அஜித் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனை தொகுத்து வழங்கியவர் நடிகர் சந்தானம். அப்போது நடிகை ஷாலினி குறித்து பேசிய விடியோ தற்போது பலரால் பகிரப்படு வருகிறது.



அதில், "அமர்க்களம் படத்துல ஷாலினி நடிக்கணும்னு புரொடக்ஷன் ஆசை பட்டாங்க. புரொடக்ஷன்ல இருந்து கேட்டபோ அவங்க நடிக்குற ஐடியா இல்ல, படிக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன கேட்டு பாக்க சொன்னாங்க. நானும் கேட்டேன், எவ்வளவு கேட்டும் ஒத்துக்கல. நான் எவ்வளவோ கன்வின்ஸ் பண்ணாலும் ஒத்துக்கல. ரொம்ப நேரம் பேசி ஒத்துக்க வச்சேன். அப்புறம் தான் படம் பண்ணோம். என்னோட ரொம்ப பெரிய க்ரிட்டிக் அவங்க. டிப்ளமேட்டிக்கா சொல்லுவாங்க என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும். ஆனா இவங்க நல்லா இல்லன்னா நல்லா இல்லன்னு சொல்லிடுவாங்க. ஆனா கதைல தலையிட மாட்டாங்க. 1986 சமயத்துல என் வீடு மந்தவெளில இருந்துச்சு, பக்கத்துல ஹோட்டல் அப்பராலிட்டி இருக்கும். அப்போ எனக்கு திருட்டு தம் அடிக்குற பழக்கம் இருந்துச்சு. அப்படி பால்கனில நின்னு தம் அடுச்சுட்டு இருந்தேன். அந்த ஹோட்டல்ல ஒரு ஷூட்டிங் க்ரூப் பாத்தேன். அப்புறம் அண்ணன் வந்ததுக்கு அப்புறம் கேட்டேன், அப்போதான் பேபி ஷாலினி நடிச்சிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க, ஷங்கர் குரு படத்தொட ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு அப்போ. அப்போவே எதோ இருந்திருக்கலாம். அமர்க்களம் படத்துல வேலை செய்யும்போது, முதல் ஷாட், அவங்க கைய கட் பண்ணிக்குற சீன். அந்த கத்தில ஒரு மெக்கானிசம் இருக்கும், கைல படும்போது, ப்ளேடு உள்ள போய்டும், கைய கிழிக்காது. ஷாட் முடிஞ்சு மானிட்டர் பாத்துட்டு இருக்கோம், அவங்க இன்னும் நடிச்சுட்டு இருக்காங்க. என்னன்னு பாத்தா கத்தில பிளேடு வெளில வந்துருச்சு, கைய கிழிச்சுருச்சு… அப்போவே ஏதோ இருந்திருக்கும்னு நெனைக்குறேன்." என்று ஷாலினியுடனான காதல் மலர்வதற்கு முந்தைய அனுபவங்களை அஜித்குமார் பகிர்ந்துகொண்டார்.



போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகவிருக்கும் நடிகர் அஜித் படம் என்பதால் படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல் இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.