இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அதன் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 


1992 ஆம் ஆண்டு பகல் நிலவு, மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி,தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்த மணிரத்னம் அரவிந்த் சாமியை கதாநாயகனாக கொண்டு ரோஜா படம் இயக்கினார். இப்படத்தில் மதுபாலா ஹீரோயினாக நடிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தினை இயக்குநர் பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். 


படம் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து, சிறந்த திரைப்பட பிரிவில் சிறப்பு பிரிவு ஆகியவற்றில் ரோஜா படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தது. அதேபோல் சிறந்த திரைப்படம், இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகி ஆகிய பிரிவுகளில் மாநில அரசு விருதுகளும் ரோஜாவுக்கு கிடைத்தது.  2005 ஆம் ஆண்டு டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக ரோஜா படம் தேர்வு செய்யப்பட்டது. 






இதனிடையே ரோஜா படம் வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு கவிதாலயா நிறுவனம் 1993 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாலசந்தர் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அந்த மகாகவி பாரதியா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்த திரைக்காவியத்தைப் பார்த்து இருந்தால்  என்ன பாடியிருப்பார் என எண்ணிப் பார்க்கிறேன். 


ரோஜா பார்த்த எழுச்சியிலே, ஒரு ரோஷம் பிறக்குது நெஞ்சினிலே, அந்த படத்தைப் பார்த்த மகிழ்ச்சியிலே, தேசபக்தி பிறக்குது மூச்சினிலே, சின்ன சின்ன ஆசையிலே, ஒரு சித்திர பாவை துள்ளுகையில், அவளைப் போல மாறிவிட ஒரு ஆசை நெஞ்சில் பிறந்ததடா, காதில் தமிழ் வந்து கேட்கும்படி புதுகானம் அமைத்தான் நல்லபடி, அந்த ரகுமானுக்கு என்கவிதை பல வெகுமானங்கள் நல்குமடா, இந்தியன் ஒருவன் பார்க்கையிலே என் இரண்டு தோளும் வீங்குதடா, இது தமிழன் எடுத்தப்படம் என்றேன் என் தலைக்கு மகுடம் ஏறுதடா


வைரம் தெறிக்கும் வார்த்தைகளால் கவி வார்த்துக் கொடுத்தான் வைரமுத்து. அந்த பேரன் எழுதிய பாட்டெல்லாம் என் பெருமை பேசும் கானமடா, தேசிய கொடியை எரிக்கையிலே என் தேகம் தீயில் துடித்ததடா, அந்த வீரன் பாய்ந்து அணைக்கையிலே, என் மீசையும் வானம் பார்த்ததடா, இந்தியா இருக்கும் நிலைமையிலே, தினம் இனத்தால், மதத்தால் எரிகையிலே என் மாபெரும் கனவை நனவாக்க மணிரத்னம் ஒருவரே போதுமடா, கவிதாலயாவின் தோட்டத்தில் ஒரு காவிய ரோஜா பூத்ததடா, இதுதான் இதுதான் கலையென என்று என் இதயம் தமிழால் வாழ்த்துதடா...! என அந்த வீடியோவில் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண