சினிமாவில் காலம் பல மாற்றத்தை ஏற்பத்தும். ஹீரோ வில்லனாகவும், வில்லன் ஹீரோவாகவும் மாறும் அனுபவம் அது. ஆனால் வில்லனை காமெடியனாக மாற்றியிருக்கிறது 2k காலம். அதில் முக்கியமானவர் ஆனந்த்ராஜ். 80களில் பிரபல வில்லன். இப்போது பிரபல காமெடியன். வில்லனாக பல நடிகர்களுடன் ஜொலித்த ஆனந்தராஜ், 1989ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தனது முதல் ரஜினி படத்தை துவக்கினார். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த ராஜாதி ராஜா தான் அந்த திரைப்படம். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படம்.


படத்தின் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கதைப்படி ஆனந்தராஜின் முறைப்பெண்ணான நதியாவை ரஜினி காதலிப்பார். ரஜினிக்கும் அவர் தான் முறைப்பெண் தான். கோழையான அந்த ரஜினியை உருட்டி, மிரட்டி வைத்திருப்பார் ஆனந்த்ராஜ். ரஜினி உடன் அடுத்து ஆனந்தராஜ் இணைய கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆனது. அதுவும் பாட்ஷா படத்தில். ஏன் இந்த இடைவெளி... நீண்ட நாட்களுக்கு பின் ஆனந்தராஜ் வாய்ப்பு பெற்றது எப்படி என்பதை பார்க்கலாம்.




ராஜாதி ராஜாவில் ஆனந்த்ராஜ் சந்தித்த மோசமான அனுபவம்


ராஜாதி ராஜாவில் ஆனந்த்ராஜ் எடுத்த கதாபாத்திரம் இன்றும் பேசப்படும். கண்களில் வில்லத்தனத்தை வைத்துக் கொண்டு, அவர் சிறப்பாக பணியாற்றியிருப்பார். ரஜினிக்கு எதிரான முதல் காட்சியாக, ‛டே... சின்ராசு...’ என்று அழைப்பது தான் அவரது முதல் டயலாக். ரஜினியை இப்படி அழைப்பதா என இயக்குனர் சுந்தராஜிடம் கேட்டுள்ளார் ஆனந்தராஜ். ‛சும்மா பண்ணுங்க...’ என சுந்தர்ராஜ் கூற, தயங்கிக்  கொண்டே இருந்திருக்கிறார் ஆனந்த்ராஜ். அதை கவனித்த ரஜினி, ஆனந்தராஜிடம் வந்து, ‛பரவாயில்ல பண்ணுங்க...’ என கூற, அதன் பிறகு தான் ஆனந்த ராஜ் தனது ரஜினி படத்திற்கான முதல் வசனத்தை பேசியுள்ளார். படத்தின் கதைப்படி ஆனந்தராஜ் க்ளைமாக்ஸ் காட்சி வரை வர வேண்டும் என்று தான் ஆனந்தராஜிடம் கதை சொல்லும் போது பேசியிருக்கிறார்கள். ஆனால், ஒரு பகுதியாக வந்து செல்லும் கதாபாத்திரமாக ஆனந்த்ராஜ் போஷன் முடிக்கப்பட்டது. அது குறித்து இயக்குனர் சுந்தர்ராஜிடம் கேட்டுள்ளார் ஆனந்த்ராஜ். அவருக்கே அந்த விபரம் தெரியவில்லை. ஆனந்த்ராஜ்க்கு எதிராக பெரிய சதி நடந்ததை அப்போது அவர்  அறிந்து கொண்டார். யார் அதை செய்தார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். 




ரஜினியுடன் கிடைக்காத வாய்ப்பு!


பேசப்பட்ட வில்லனாக இருந்த போதும், ரஜினி படத்தில் அதன் பின் ஆனந்தராஜ்க்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் பிஸியான வில்லனாகவும், இடையிடையே ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருந்தார். ஏன் இந்த விரிசல்... யார் செய்த விரிசல்... எதனால் இந்த இடைவெளி என ஆனந்த்ராஜிற்கே தெரியவில்லை. அவரும் பிஸியாக இருந்ததால் அதை அறிந்து கொள்ள நேரமும் இல்லை. இப்படியே தான் அவரது காலங்கள் கடந்துள்ளது. ஆனால் யாரோ ஒருவர் அதன் பின்னணியில் இருக்கிறார் என்று மட்டும் ஆனந்த்ராஜ் நினைத்திருந்தார்.




6 ஆண்டுகளுக்கு பின் வந்த அழைப்பு!


இப்போது இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் இருந்து ரஜினிக்கு அழைப்பு வருகிறது. ‛பட்ஷா’ படத்தில் வில்லன் வாய்ப்பு என்று கூறியுள்ளார். படம் முடிய இன்னும் 10 நாட்களே இருப்பதாக செய்திகள் வந்த சமயம் அது. தேவன், சரண்ராஜ், ரகுவரன் என ஏகப்பட்ட வில்லன்கள் அதில் இருக்கிறார்கள் என விளம்பரம் வந்திருந்ததால், நமக்கு என்ன வேலை என பல குழப்பம் அவருக்கு. இருந்தாலும் அழைத்ததால் அங்கு சென்றிருக்கிறார். வாஹினி ஸ்டூடியோவில் ரஜினி, எழுத்தாளர் பாலகுமரன், இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இருந்துள்ளனர். ‛படம் முடியப்போறதா சொல்றாங்க... இப்போ கூப்பிட்டு இருக்கீங்க...’ என ஆனந்த்ராஜ் அப்பாவியாய் கேட்டிருக்கிறார். ரஜினி பேச ஆரம்பித்திருக்கிறார்.... ‛இல்ல ஆனந்த்ராஜ்... இந்த சீனை தான் முதலில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் நாங்க காத்திருந்தோம். ரொம்ப முக்கியமான சீன். என்னை கட்டிவெச்சு அடிக்கனும்’ என ரஜினி கூற, உடனே எழுந்திருக்கிறார் ஆனந்த்ராஜ். ‛சார்... விளையாடுறீங்களா... உங்களை நான் அடிச்சு... நான் அடி வாங்குறதா...’ என கிளம்ப முயற்சித்திருக்கிறார். ‛இல்லை ஆனந்த்ராஜ்... இது ரொம்ப முக்கியமான சீன்... நீங்க நடிச்சா தான் நல்லா இருக்கும்.... வேறு யாரு அடிச்சாலும் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க... நீங்க அடிச்சா ஏத்துப்பாங்கனு தோணுது,’னு ரஜினி சொல்ல, மறுநிமிடம் காலில் விழுந்து, இந்த நம்பிக்கைக்காக நான் நடிக்கிறேன்னு சொல்லி ஆனந்த்ராஜ் நடிக்க ஒப்புக்கொண்டார். பாட்ஷாவில் வரும் இந்திரன் கதாபாத்திரம். இன்றும், என்றும் யாரும் மறக்கமுடியாத கதாபாத்திரம்.