கோடை காலத்தில் அடிக்கும் வெயிலில் வீட்டை விட்டு வெளியேறி, வார இறுதியைக் கொண்டாடுவது கடினமான செயலாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த வார இறுதியில் பொழுதுபோக்கிற்காக ஓடிடி தளங்களில் பல்வேறு புதிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.. இவற்றுள் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலமாக, இந்த வார இறுதியை உங்களால் மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.
ஓ மை டாக்
நாஸ்டால்ஜியா உணர்வைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில், மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்களான நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய், அவரது பேரன் ஆர்னவ் விஜய் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். நாய்களை வளர்ப்பவர்களும், நாய்கள் மீது அதீத அன்பைப் பொழிபவர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயமாக பிடிக்கும். `ஓ மை டாக்’ தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது.
அந்தாக்ஷரி
நல்ல கதையமைப்பை விரும்புவோருக்கு `அந்தாக்ஷரி’ திரைப்படம் சிறந்த தேர்வாக இருக்கும். `திருஷ்யம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஜீத்து ஜோசப் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை விபின் தாஸ் இயக்கியுள்ளார்; சஜ்ஜூ குரூப் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். பாட்டு விளையாட்டான அந்தாக்ஷரி மீது ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரியின் கதையாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் சோனி லிவ் தளத்தில் வெளியாகியுள்ளது
கனி
வருண் தேஜ் முன்னணி வேடத்தில் நடித்துள்ள தெலுங்கு மொழித் திரைப்படமான `கனி’ ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை என்ற போதும், இந்தத் திரைப்படம் வளர்ந்து வரும் பாக்சிங் வீரரின் கதையைப் பேசிவதற்காகவும், சுனில் ஷெட்டி, உபேந்திரா முதலானோரின் நடிப்புக்காகவும் பாராட்டப்படுகிறது.
செல்ஃபி
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள `செல்ஃபி’ திரைப்படத்தில் அவருடன் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். `ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் திரைபடத்தில் கல்லூரி சேர்க்கையில் நடத்தப்படும் மோசடிகளைக் குறித்து பேசியுள்ளனர்.
டாணாக்காரன்
அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள `டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. 1997ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் காவலர் பயிற்சியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திரைப்படங்கள் மட்டுமின்றி, பிரபாஸ் நடித்த `ராதே ஷ்யாம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திலும், மம்முட்டி நடித்துள்ள `பீஷ்ம பர்வம்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும், டொவினோ தாமஸ் நடித்துள்ள `நாரதன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திலும், சோனி லிவ் தளத்தில் ஷர்வானந்த், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள `ஆடவல்லு மீக்கு ஜொஹார்லு’ திரைப்படமும் வெளியாகியுள்ளன. இவற்றையும் கண்டு மகிழலாம்.