சினிமாவில் கிசுகிசு வருவது எல்லாம் சர்வ சாதாரணமான ஒரு விஷயம். ஆனால் எந்த ஒரு கிசுகிசுவில் சிக்காத ஒரு கண்ணியமான மனிதர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். ராஜராஜ சோழன், பட்டிக்காட்டு ராஜா என பல படங்களில் நடித்து இருந்தாலும் இசைஞானி இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஏராளமான படங்களில் நாயகனாகவும் துணை நடிகராகவும் சிறப்பாக நடித்து வந்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவரின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்ததால் அப்பா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் நுழைந்தார். நடிகை ராதிகாவின் மிகவும் பிரபலமான சீரியலான 'சித்தி' சீரியலில் நடித்ததன் மூலம் மீண்டும் பிரபலமானார். அவரின் மகன்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அற்புதமான நடிகராக திகழ்ந்த சிவகுமார் சினிமாவில் இருந்து விலக அவர் எதிர்கொண்ட மனக்கசப்பான அனுபவம் தான் காரணம் என கூறப்படுகிறது.
'சித்தி' சீரியலில் நடிகர் சிவகுமார் காட்சி ஒன்றுக்காக பிராக்டிஸ் செய்து கொண்டு இருந்துள்ளார். அந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக 'பாசமலர்' படத்தில் சிவாஜி கணேசன் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தது போல தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் தூங்காமல் பிராக்டிஸ் செய்து வந்துள்ளார். அவர் கஷ்டப்பட்டு நடித்து கொண்டு இருக்கும் போது அருகில் இருந்த ஒரு கோ-ஆர்ட்டிஸ்ட் போனில் தனது ஆண் நண்பருடன் பேசி சிரித்து கொண்டு இருந்துள்ளார். அதை பார்த்து கடுப்பான சிவகுமார் "நான் இவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்குறேன். அதை கொஞ்சம் கூட மதிக்காமல் சிரிக்கிறாயே?" என கேட்டதற்கு அந்த பெண் "ஏன் சார் சும்மா கத்துறீங்க? எப்படியும் டப்பிங்கில் தானே பேசப்போறீங்க?" என அலட்சியமாக பதிலளிக்க அதை கேட்டு மனம் நொந்து போனார் நடிகர் சிவகுமார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் போது அதை பார்த்த அருகில் இருந்த எல்லோரும் அழுதுள்ளனர். மெய்மறந்து போன இயக்குநர் கூட கட் சொல்ல மறந்து விட்டாராம். அந்த அளவுக்கு அவருடைய நடிப்புக்கு மரியாதை கொடுத்தார்கள். ஆனால் அந்த மரியாதை இப்போ இல்லை. என்னை நானே செருப்பால் அடித்துக்கொண்டு இனி நடிப்பு வேண்டாம் என முடிவெடுத்து அன்று முதல் மேக்கப் போட மாட்டேன் என நடிப்பையே நிறுத்தி கொண்டாராம். அன்றில் இருந்து இன்று வரை அவர் எந்த ஒரு படத்திலோ அல்லது சீரியலிலோ நடிக்கவில்லை. அஜித்- ஜோதிகா நடிப்பில் வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' அவர் கடைசியாக நடித்த திரைப்படம்.
ஆனால் இன்றும் சிறப்பான சொற்பொழிவாளராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.