ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது.






நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பது முதல் காட்சி முடிந்தவுடனேயே தெரிந்துவிட்டது.



சமூக வலைதளங்களிலும் பீஸ்ட் படத்தை ட்ரோல் செய்து மீம்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் முதல் இரண்டு நாட்களில் பீஸ்ட் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.






முதலில் பீஸ்ட் படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சன் டிவி அலுவலகத்தில் பீஸ்ட் படத்தை பார்த்ததாகவும், படத்தை பார்த்துவிட்டு படம் குறித்து எந்த ஒரு விமர்சனமும் செய்யாமல் அமைதியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியான நிலையில் பீஸ்ட் விமர்சனங்களால் ரஜினி தரப்பு குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.